நள்ளிரவில் சுவா் இடிந்து விழுந்து தம்பதி படுகாயம்
குமராட்சி அருகே நள்ளிரவில் சுவா் இடிந்து விழுந்து தம்பதி படுகாயம்
காட்டுமன்னார்கோவில்
காட்டுமன்னார்கோவில் குமராட்சி பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்ததது. இதனால் தாழ்வான குடியிருப்புபகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால் பல இடங்களில் குடிசை வீடுகள் இடிந்து சேதமாகி வருகிறது.
இந்த நிலையில் குமராட்சி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த கொத்தங்குடி கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் தொழிலாளி சோமசுந்தரம்(வயது 50). நேற்று முன்தினம் இவர், இவரது மனைவி நிர்மலா(45), மகன்கள் அய்யப்பன்(22), மணிகண்டன்(22) மற்றும் சோமசுந்தரத்தின் தம்பி சுரேஷ்(45) ஆகிய 5 பேரும் கூரை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென வீட்டின் சுவர் இடிந்து தூங்கிக் கொண்டிருந்த சோமசுந்தரம், நிர்மலா ஆகியோர் மீது விழுந்தது. இதனால் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி படுகாயம் அடைந்த அவர்கள் கூச்சலிட்டனர். இந்த சத்தம் கேட்டு அவரது மகன்கள் மற்றும் சுரேஷ், அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய தம்பதியை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இந்த விபத்தில் சோமசுந்தரத்தின் வீட்டில் இருந்த பொருட்களும் சேதமானது. இது குறித்து குறித்து புத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.