குமரி மாவட்டத்தில் தேவாலயங்கள் சீரமைக்கும் பணிக்கு நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்
குமரி மாவட்டத்தில் தேவாலயங்கள் சீரமைக்கும் பணிக்கு நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் தேவாலயங்கள் சீரமைத்தல் மற்றும் பழுது பார்த்தல் பணிக்கு நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அரவிந்த் அறிவித்துள்ளார்.
நிதி உதவி
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் சொந்தக் கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம் 2016-2017 முதல் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தேவாலயங்களில் ஏற்பட்டுள்ள பழுதுகள் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக கட்டிடத்தின் வயது ஆகியவற்றை கருத்திற்கொண்டு 10 முதல் 15 வருடங்கள் வரை இருப்பின் ரூ.1 லட்சமும், 15 முதல் 20 வருடங்கள் வரை இருப்பின் ரூ.2 லட்சமும், 20 வருடங்களுக்கு மேல் இருப்பின் ரூ.3 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் நிதி உதவி பெறுவதற்கான தகுதிகள் விவரம் வருமாறு:-
கிறிஸ்தவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டிடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். தேவாலயத்தின் சீரமைப்பு பணிக்காக வெளி நாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றிருத்தல் கூடாது. சான்றிதழ் அளிக்க வேண்டும். சீரமைப்பு பணிக்காக ஒரு முறை நிதி உதவி அளிக்கப்பட்ட தேவாலயத்திற்கு மறுமுறை நிதி உதவி 5 ஆண்டுகளுக்கு பின்னர் வழங்கப்படும். விண்ணப்பப்படிவம் மற்றும் சான்றிதழ் இணையதள முகவரியில் www.bcmbcmw@tn.gov.in ல் வெளியிடப்பட்டுள்ளது.
பரிந்துரை செய்யப்படும்
இதனை பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தை அதிலுள்ள பிற்சேர்க்கை- 2 மற்றும் 3-ல் உள்ளவாறு பூர்த்தி செய்து அனைத்து உரிய ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களோடு மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும். கலெக்டர் தலைமையிலான மாவட்ட குழுவினரால் அந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு கிறிஸ்தவ தேவாலயங்களை தல ஆய்வு செய்து, கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் நிதி உதவி வேண்டி கலெக்டரால் பரிந்துரை செய்யப்படும்.
நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக்கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும். எனவே குமரி மாவட்டத்தில் தேவாலங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்ள நிதி உதவி பெறுவதற்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.