'சினிமா என் தொழில்; அரசியல் என் கடமை' 68-வது பிறந்தநாள் விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேச்சு
‘சினிமா என் தொழில்; அரசியல் என் கடமை’ என தனது பிறந்தநாள் விழாவில் கமல்ஹாசன் பேசினார்.
சென்னை,
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் நேற்று தனது 68-வது வயதில் அடியெடுத்து வைத்தார். இதையொட்டி சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகம் விழாக்கோலம் பூண்டிருந்தது. கட்சி நிர்வாகிகளும், ரசிகர்களும் திரண்டிருந்தனர். இதற்கிடையில் கட்சி அலுவலகம் வந்த கமல்ஹாசனுக்கு செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். 'ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவா... வாழ்க' என்ற கோஷம் ஒலித்துக்கொண்டே இருந்தது.
தனது பிறந்தநாளையொட்டி கட்சி அலுவலகத்தில் பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாம் மற்றும் பல் சிகிச்சை முகாமை கமல்ஹாசன் தொடங்கிவைத்தார். கட்சியினர், ரசிகர்களுக்கு தென்னங்கன்று வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து விழாவில் கமல்ஹாசன்பேசியதாவது:-
நற்பணிகளே எனக்கு கவுரவம்
என்னுடைய வயதின் எண்ணிக்கை எனக்கு கவுரவத்தை சேர்க்காது. கட்சியினர் செய்திருக்கும் நற்பணிகளின் எண்ணிக்கைதான் கவுரவத்தை சேர்க்கும். என் ஆயுளை கூட்டும். வருடத்தில் ஒரு நாளை பிறந்தநாள் என கொண்டாடுவதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. வாழ்க்கையை கொண்டாட வேண்டும். இங்கு இந்த விழா கொண்டாடப்படுவதின் நோக்கம், இதை ஒரு காரணமாக வைத்து மக்களுக்கு நற்பணி செய்வதற்கான ஒரு மேடை அமைத்துக்கொடுக்கத்தான்.
சாலைகளில் ஏற்படும் பள்ளங்களை அரசுதான் முன்வந்து சீர் செய்ய வேண்டும் என கிடையாது. நாமே அதை முன்வந்து சீர் செய்தாலும் அவை நற்பணி தான். அமெரிக்கா முதல் சின்ன குக்கிராமங்களில் கூட நற்பணிகளை கட்சியினர் செய்து வருகிறார்கள். இதுவரை 68 இடங்களில் பல பள்ளிகளுக்கு கழிப்பறைகள் கட்டிக்கொடுத்திருக்கிறோம். இதுதான் எனக்கு பெருமை.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சி துணைத்தலைவர்கள் தங்கவேலு, ஏ.ஜி.மவுரியா உள்பட நிர்வாகிகள், ரசிகர்கள் மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
தொழிலும், கடமையும்...
அதனைத்தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் மற்றும் கமல் கலைக்கூடம் சார்பில் நடந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பங்கேற்று பேசியதாவது:-
அரசியல் சிலருக்கு அடையாளம், சிலருக்கு கவுரவம், சிலருக்கு தொழில். பலருக்கு பிழைப்பதற்கான வழி. எனக்கு அரசியல் என்பது கடமை, அதேதான் உங்களுக்கும். இப்போதைக்கும் நாம் கொண்டாட வேண்டியது விழாக்களை அல்ல, தமிழகத்தை. மற்றவை தன்னால் நடக்கும். இது சம்பாதிப்பதற்கான கட்சி அல்ல. அப்படி நடத்தியிருந்தால் இந்த மய்யம் ஓரம்கட்டப்படும். எத்தனை தோல்வி வந்தாலும் இன்றும் துவளாமல் நிற்க காரணம், நாம் நமது கொள்கையில் பற்றாக இருக்கிறோம் என்று மக்களுக்கு புரிகிறது.
இப்போது படம் நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறீர்களே என்கிறார்கள். சினிமா என் தொழில். அரசியல் என் கடமை. சினிமா சாப்பாடு போல, கடமை என் மூச்சு போல. 7 நாள் கூட சாப்பிடாமல் இருக்கலாம். ஆனால் 7 நொடிக்கு மேல் மூச்சு விடாமல் இருக்க முடியாது.
ஒருதலை காதல்
காதல் வரும்போது மனம் முழுக்க அந்த எண்ணம்தான் ஓடும். அதுபோல அரசியலும் இருக்க வேண்டும். அப்படி செய்தால் மக்கள் நம்மை காதலிப்பார்கள். இல்லையென்றால் ஒருதலை காதலாகவே இருப்போம். எதெல்லாம் நடக்கக்கூடாது என்று காந்தி நினைத்தாரோ, அதையெல்லாம் இந்த 75 ஆண்டுகளில் நாம் அரங்கேற்றி இருக்கிறோம். அதற்கு மாற்றாக சட்டையை திறந்துகொண்டு கவசம் இல்லாமல் களம் இறங்கியிருக்கிறேன் நான். நீங்களும் அவ்வாறே இருக்கவேண்டும்.
இன்னும் பல திட்டங்கள் இருக்கின்றன. மய்யம் சார்பில் பத்திரிகை தொடங்க இருக்கிறோம். நானும், நீங்களும் உரையாடும் கருவியாக அது மாறும். முன்பு அது நடந்தது. இப்போது அதை தொடருவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழகம் தாண்டி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் ரசிகர்கள் காணொலி மூலம் கமல்ஹாசனுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.
சாருஹாசனிடம் வாழ்த்து
முன்னதாக பிறந்தநாளையொட்டி கமல்ஹாசன், தனது அண்ணன் சாருஹாசன்-கோமளம் ஆகியோரிடம் நேற்று வாழ்த்து பெற்றார். திரை உலகினரும், அரசியல் கட்சி பிரமுகர்களும் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.