சினிமா ஒளிப்பதிவு உதவியாளர் தூக்குப்போட்டு தற்கொலை; பங்குசந்தையில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் விபரீத முடிவு
பங்குசந்தையில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் சினிமா ஒளிப்பதிவு உதவியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கொல்லங்கோடு,
பங்குசந்தையில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் சினிமா ஒளிப்பதிவு உதவியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சினிமா ஒளிப்பதிவு உதவியாளர்
கொல்லங்கோடு அருகே உள்ள மார்த்தாண்டன்துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் தேவதாசன் (வயது 40). இவர் சினிமா மற்றும் குறும்படங்களில் ஒளிப்பதிவு உதவியாளராக பணியாற்றி வந்தார். தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் பணியாற்றிய அனுபவம் அவருக்கு இருந்தது.
இதற்கிடையே பூத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த ஜெரிபாய் என்பவரை திருமணம் செய்து கோவையில் உள்ள காந்திகிராமத்தில் வசித்து வந்தார். இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகனும், 11 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்தநிலையில் பங்குச்சந்தையில் மும்முரமாக ஈடுபட்ட தேவதாசன் அதிலிருந்து வெளியே வர முடியாமல் தவித்துள்ளார்.
பணத்தை இழந்தார்
ஒரு கட்டத்தில் அதனையே தொழிலாக நினைத்து மூழ்கினார். இந்த மோகத்தால் லட்சக்கணக்கில் அவர் பணத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். சம்பாதித்த பணத்தையெல்லாம் இழந்ததால் மனவருத்தத்தில் இருந்த அவர் தனது மனைவி, பிள்ளைகளுடன் கடந்த 3 மாதத்திற்கு முன்பு பூத்துறை பகுதிக்கு வந்து தங்கினார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் தேவதாசன் மார்த்தாண்டன்துறையில் வசித்து வரும் தனது தாய், தந்தையை பார்த்து வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
அப்போது பங்குச்சந்தையில் முதலீடு செய்து பணத்தை இழந்ததாக கூறி அவர்களிடம் வருத்தப்பட்டுள்ளார். உடனே பெற்றோர் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.
எனினும் அவர் மிகவும் சோகமாக இருந்தார். பிறகு மாடியில் உள்ள அறைக்கு சென்றார். அதன்பிறகு வெகுநேரமாகியும் அவர் மாடியில் இருந்து கீழே இறங்கி வரவில்லை.
தற்கொலை
எனவே சந்தேகமடைந்த பெற்றோர் அறைக்கு சென்று பார்த்த போது அங்கு தேவதாசன் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த இருவரும் கதறி அழுதனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கயிற்றை அறுத்து தேவதாசனை மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ஜெரிபாய் அளித்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பரபரப்பு தகவல்
அப்போது பங்குச்சந்தையில் முதலீடு செய்ததில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தேவதாசன் ஏராளமானவர்களிடம் கடன் வாங்கியுள்ளார். பின்னர் அந்த கடனையும் அடைக்க முடியாததால் கோவையில் உள்ள வீட்டை விற்றுள்ளார். தொடர்ந்து குடும்பத்தினருடன் கடந்த 3 மாதத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த அவர் தற்கொலை செய்தது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.
சினிமா ஒளிப்பதிவு உதவியாளர் தற்கொலை செய்த சம்பவம் கொல்லங்கோடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.