தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
பணத்தை திரும்ப தரக்கோரி தனியார் நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
வேலூர் சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ அலுவலக சாலையில் அழகுசாதன பொருட்கள் விற்பனை நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ரூ.9 ஆயிரம் செலுத்தி அதற்கு அழகுசாதன பொருட்கள் பெற்று பலர் அந்த நிறுவனத்தின் உறுப்பினராகி உள்ளனர். அவர்களிடம் அந்த நிறுவன ஊழியர்கள் பலரை இந்த நிறுவனத்தில் உறுப்பினராக சேர்த்தால் அவர்கள் செலுத்தும் பணத்தில் ஒரு பங்கு உங்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். அதன்பேரில் அவர்கள் பலரை உறுப்பினராக சேர்ந்துள்ளனர். ஆனால் கடந்த சில மாதங்களாக சிலருக்கு ரூ.9 ஆயிரத்துக்கான அழகு சாதன பொருட்கள் வழங்கப்படவில்லை. இதையடுத்து அவர்கள் பணத்தை திரும்ப கேட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் அணைக்கட்டு பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று அந்த நிறுவனத்தை முற்றுகையிட்டு ரூ.9 ஆயிரத்தை திரும்ப தரும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அங்கிருந்த ஊழியர்கள் உரிய பதில் தெரிவிக்காமல் காலம் கடத்தி உள்ளனர். அதனால் பொதுமக்கள் நிறுவன ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிலர் நிறுவனத்துக்குள் செல்ல முயன்றனர். அவர்களை நிறுவன ஊழியர்கள் தாக்கி கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதில், காயமடைந்த 2 பேர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதொடர்பாக சத்துவாச்சாரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.