டாஸ்மாக் கடையை மூடக்கோரி கொட்டும் மழையில் பொதுமக்கள் சாலை மறியல்
குடியாத்தத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் கொட்டும் மழையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து டாஸ்மாக் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
குடியாத்தத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் கொட்டும் மழையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து டாஸ்மாக் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
டாஸ்மாக் கடை திறப்பு
குடியாத்தம் கொண்டசமுத்திரம் அம்பேத்கர் நகர் அருகே உள்ள ஸ்ரீவாரி நகரில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள், மகளிர் குழுக்கள், இளைஞர் அணியினர் இப்பகுதியில் இரண்டு பள்ளிகள் உள்ளதாகவும், அருகிலேயே வங்கிகள், படிப்பகம், திருமண மண்டபம், வணிக நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் உள்ளதாகவும், இங்கு டாஸ்மாக் கடை அமைந்தால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பெண்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே இங்கு டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும், மற்றும் சட்டமன்ற உறுப்பினர், நகர மன்ற தலைவர் ஆகியோருக்கும் மனு அளித்ததாக கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் அப்பகுதி பொதுமக்களிடம், இங்கு டாஸ்மாக் கடை அமைக்க வாய்ப்பு இல்லை என உறுதி அளித்தனர். இந்தநிலையில் திடீரென நேற்று முன்தினம் இரவு அங்கு டாஸ்மாக் கடை திறக்க ஆயத்த பணிகள் நடைபெற்று லாரியில் மதுபானங்கள் வந்து இறங்கி உள்ளது.தொடர்ந்து நேற்று மதியம் பூஜை செய்து 12 மணி அளவில் டாஸ்மாக் கடையை திறக்க ஊழியர்கள் தயாராக இருந்தனர்.
சாலை மறியல்
இதனையறிந்த அப்பகுதி பொதுமக்கள் திடீரென தாலுகா அலுவலகம் முன்பு கொட்டும் மழையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு விரைந்து வந்த குடியாத்தம் தாசில்தார் விஜயகுமார், துணை தாசில்தார் சுபிசந்தர், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, சப்- இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், தண்டபாணி உள்ளிட்ட போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இங்கு டாஸ்மாக் கடை திறக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். அதற்கு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் டாஸ்மாக் கடை சிறிது நேரத்துக்கு முன் திறந்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தனர். இதனையடுத்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை முன்பு திரண்டனர்.
சீல் வைப்பு
இதனால் அங்கு விரைந்து வந்த தாசில்தார் விஜயகுமார் மற்றும் வருவாய்த் துறையினர், போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுத்தனர். மேலும் அந்த டாஸ்மாக் கடை திறப்பது குறித்து வருவாய்த்துறைக்கும், காவல்துறைக்கும் உரிய தகவல் தெரிவிக்காததால் கடையை மூட நடவடிக்கை எடுப்பதாகவும் பொது மக்களிடம் உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் ஜெயமுருகன் மது கடையை பூட்டி சீல் வைத்தார்.