தமிழக அரசு நிவாரணம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
மயிலாடுதுறை தாலுகா பகுதிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மயிலாடுதுறை தாலுகா பகுதிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலை மறியல்
மயிலாடுதுறை தாலுகா தர்மதானபுரம் ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.மழை பெய்து 4 நாட்களாகியும் இன்னும் தண்ணீர் வடியாமல் உள்ளது என்று கூறியும், மயிலாடுதுறை பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்காத தமிழக அரசை கண்டித்தும் ஊராட்சி மன்ற தலைவர் சிலம்பரசன் தலைமையில் பொதுமக்கள், விவசாயிகள் சம்பா நாற்றுகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
மயிலாடுதுறை தாலுகா தர்மதானபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள மணியாறு, ஆத்துக்குடி வடிகால் வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாததை கண்டித்தும், தமிழக அரசு சீர்காழி தாலுகா மற்றும் தரங்கம்பாடி தாலுகா பகுதிகளுக்கு நிவாரணம் அறிவித்துள்ள நிலையில் மயிலாடுதுறை தாலுகாவிற்கு நிவாரணம் அறிவிக்காததை கண்டித்தும் பொதுமக்கள் கோஷங்கள் எழுப்பினர்.இந்த சாலை மறியல் போராட்டத்தால் மயிலாடுதுறை-சீர்காழி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சீர்காழி
சீர்காழி அருகே சூரக்காடு கிராமத்தில் அரசு சார்பில் ஒரு தரப்பினருக்கு அரிசி, பாய், மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவி வழங்கப்பட்டது. இதனை கண்டித்து மற்றொரு தரப்பினர் நேற்று சூரக்காட்டில் நாகை- சீர்காழி பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது கனமழையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாகுபாடு இன்றி நிவாரணம் வழங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.தகவல் அறிந்த சீர்காழி போலீசார் மற்றும் வட்ட வழங்கல் அதிகாரிகள் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனடியாக நிவாரணம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் அங்கிந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சீர்காழி, பூம்புகார், நாகை சாலையில் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
இதே போல் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தில் மின்வினியோகம் வழங்கக்கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவருக்கும் விரைவாக மின்சாரம் வழங்கப்படும் என தெரிவித்தனர்.இதில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் 30 நிமிடம் திருமுல்லைவாசல் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.