அரசு பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் சாலை மறியல்


அரசு பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் சாலை மறியல்
x

நஞ்சுகொண்டாபுரத்தில் சேறும் சகதியுமான சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள், அரசு பஸ்சை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.

வேலூர்

நஞ்சுகொண்டாபுரத்தில் சேறும் சகதியுமான சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள், அரசு பஸ்சை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.

சேறும் சகதியுமான சாலை

கணியம்பாடி அடுத்த அமிர்தியில் சிறுவன உயிரின பூங்கா உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் தினந்தோறும் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். வேலூரில் இருந்துஅமிர்திக்கு செல்ல பென்னாத்தூர், நாகநதி மற்றும் நஞ்சுகொண்டாபுரம் வழியாக செல்லும் சாலையையே அரசு பஸ்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

நாகநதி கூட்ரோட்டில் இருந்து அமிர்தி பூங்கா வரை உள்ள சாலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால் தற்போது சாலை முழுவதும் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலை சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக அதிக அளவில் விபத்துகளும் நடக்கிறது. இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் கிராம மக்கள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைகின்றனர்.

பஸ்சை சிறைபிடித்து போராட்டம்

எனவே அமிர்தி சாலையை சீரமைக்கக் கோரி அந்தப்பகுதி மக்கள் பலமுறை வனத்துறை மற்றும் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நஞ்சுக்கொண்டாபுரம் கிராம மக்கள், அமிர்தியிலிருந்து வேலூர் நோக்கி வந்த அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் சீதா தமிழ்ச்செல்வன், துணைத்தலைவர் கன்னியப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலையை சீரமைப்பது குறித்து வனத்துறை மற்றும் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பஸ்சை விடுவித்தனர்.


Related Tags :
Next Story