விருத்தாசலம் அருகே மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
விருத்தாசலம் அருகே மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் நேற்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின் வினியோகம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு 8 மணி வரை மின் வினியோகம் செய்யவில்லை. இதுபற்றி அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரியிடம் கேட்டபோது மதியம் 2 மணிக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்தனர். இருப்பினும், இரவு நீண்ட நேரமாகியும் மின்தடை தொடர்ந்து நீடித்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், புதுக்கூரைப்பேட்டை பஸ் நிறுத்தத்தில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உடனடியாக மின்வினியோகம் செய்யக்கோரி, கோஷம் எழுப்பினர். இதுபற்றி அறிந்த மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மின்வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து இரவு 8.30 மணிக்கு அப்பகுதியில் மின்வினியோகம் செய்யப்பட்டது. இருப்பினும் இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.