குளத்தை தூர்வாரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
குளத்தை தூர்வாரக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவில் அருகே பழமையான குளம் உள்ளது. இந்த குளத்தில் ஆகாய தாமரைகள் மண்டி பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டது. இந்த குளத்தை தூர்வாரி பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து நகராட்சி சார்பில் அந்த குளம் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் குளத்தை முழுமையாக தூர்வாராமல் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், குளத்தின் அருகே உள்ள பழனியப்பா நகர், அபிராமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீர் குளத்தில் கலப்பதாகவும், இதனால் குளத்தில் துர்நாற்றம் வீசி நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இந்த நிலையில் புதுக்கோட்டையில் அரசு அருங்காட்சியகம் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதன்பின் மறியலை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.