செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை


செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை
x

செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

திருச்சி

துறையூர்:

அனுமதியின்றி செல்போன் கோபுரம்

துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட குடில் சாலை அருகே உள்ள இந்திராநகர் விஸ்தரிப்பு பகுதியில் குடியிருப்புகளின் மத்தியில் உரிய அனுமதியின்றி தனியார் நிறுவனத்தின் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, நேற்று நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர். அதன் அடிப்படையில் நகராட்சி அதிகாரிகள், செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்த உத்தரவிட்டனர்.

ஆனால் அந்த உத்தரவை மீறி நேற்று காலை செல்போன் கோபுரம் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் மீண்டும் நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நகரமைப்பு பொறியாளர் பாலசுப்பிரமணியன் அங்கு வந்து, செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்துமாறு தொழிலாளர்களிடம் கூறினார்.

முற்றுகை

ஆனாலும் அவர்கள் அந்த பணியை நிறுத்தவில்லை. இதையடுத்து அவர்கள் பணியை நிறுத்திவிடுவார்கள் என்று பாலசுப்பிரமணியன் கூறிவிட்டு, அங்கிருந்த செல்ல முயன்றபோது, அவருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது உடனடியாக அந்த பணியை நிறுத்தச்செய்யுமாறு வலியுறுத்தினர். இதையடுத்து அந்த பணி நிறுத்தப்பட்டதை தொடர்ந்து பாலசுப்பிரமணியன் அங்கிருந்து சென்றனார்.

சிறிது நேரத்திற்கு பின்னர் மீண்டும் அந்த பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள், பணி நடந்த இடத்தை முற்றுகையிட்டனர். இதனால் மீண்டும் அந்த பணி நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story