குப்பைகள் இல்லாத மாவட்டமாக மாற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்


குப்பைகள் இல்லாத மாவட்டமாக மாற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்
x

திடக்கழிவு மேலாண்மை குறித்து புதிய இயக்கம் தொடங்கப்பட்டது. குப்பைகள் இல்லாத மாவட்டமாக மாற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கலெக்டர் பேசினார்.

நீலகிரி

ஊட்டி,

திடக்கழிவு மேலாண்மை குறித்து புதிய இயக்கம் தொடங்கப்பட்டது. குப்பைகள் இல்லாத மாவட்டமாக மாற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கலெக்டர் பேசினார்.

புதிய இயக்கம்

நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா ஊராட்சியில் சுகாதாரம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நம்ம ஊரு சூப்பரு என்ற இயக்கத்தை கலெக்டர் அம்ரித் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

பொதுமக்களின் சுகாதாரமான வாழ்க்கைக்கு, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம்.

திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத மாவட்டம் என்ற நிலையை அடைந்தது போல, குப்பைகள் இல்லாத மாவட்டமாக மாற அனைவரது ஒத்துழைப்பும் அவசியம். குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொருவரும் திடக்கழிவு மேலாண்மையின் முக்கியத்துவம் குறித்து தெரிந்துகொள்ளும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சுற்றுச்சூழல் தூய்மையான கிராமங்களை அடையவும், வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும் நம்ம ஊரு சூப்பரு என்ற இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது.

கண்காணிப்பு அலுவலர்கள்

இதன் மூலம் சுகாதாரம், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த திட்டம் குறித்து வருகிற அக்டோபர் 2-ந் தேதி வரை பல்வேறு பிரச்சாரம் மற்றும் செயல்பாடுகள் நடைபெற உள்ளது. இதனை கண்காணிக்க ஊராட்சி ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்களும், ஊராட்சி அளவில் பொறுப்பு அலுவலர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். கிராமப்புறங்களில் சுற்றுச்சூழலை பாதுகாக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. பல்வேறு துறை அலுவலர்களுக்கு இதுகுறித்து அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கிராமப்புற மக்களுக்கு குடிநீர், மரம் வளர்ப்பு, கழிப்பறை கட்டுவது, திடக்கழிவு மேலாண்மை போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

நம்ம ஊரு சூப்பரு என்ற இயக்கத்தின் மூலம் சுகாதாரம் காக்கவும், மக்கும் குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கவும், தடுப்பணை, பண்ணைக்குட்டை உட்பட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், உதவி இயக்குனர் சாம் சாந்தகுமார் (ஊராட்சிகள்), ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் நந்தகுமார், தொட்டபெட்டா ஊராட்சி தலைவர் ஜவஹர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story