டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் திடீர் போராட்டம்


டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 8 Jun 2023 12:15 AM IST (Updated: 8 Jun 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் திடீர் போராட்டம் நடத்தினர்

விழுப்புரம்

விழுப்புரம்

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு

விழுப்புரம் சாலாமேடு ரெயில்வே கேட் அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளுக்கு மத்தியில் செயல்பட்டு வரும் இந்த டாஸ்மாக் கடையில் மது குடிக்க வருபவர்கள் அங்கேயே மது குடித்துவிட்டு போதை தலைக்கேறியதும் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று அறுவருக்கத்தக்க வார்த்தைகளால் பேசி ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதால் இந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரி பல மாதங்களாக பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் பலமுறை புகார் மனு கொடுத்தும் இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பொதுமக்கள் போராட்டம்

இந்நிலையில் நேற்று மாலை அந்த கடைக்கு மது குடிக்க வந்தவர்கள், போதை தலைக்கேறிய நிலையில் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு சென்று ரகளையில் ஈடுபட்டவர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடைக்கு திரண்டு சென்று கடையை மூடக்கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக உடனடியாக அந்த கடையை தற்காலிகமாக ஊழியர்கள் மூடினர். அதன் பிறகு போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.

இதனையறிந்த பொதுமக்கள் மீண்டும் அக்கடைக்கு திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதையடுத்து சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க போலீசார், அந்த டாஸ்மாக் கடையை மூடுமாறு அதன் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியதன்பேரில் அவர்கள் மீண்டும் டாஸ்மாக் கடையை மூடிவிட்டு அங்கிருந்து சென்றனர். இந்த போராட்டத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story