சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருவாரூரில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
திருவாரூர்:
திருவாரூர் தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை செயலாளர் அனிபா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மாலதி, மாவட்ட செயலாளர் முருகையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் நடராஜன், சாலை வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் ரகுபதி, டாஸ்மாக் சங்க மாவட்ட செயலாளர் லெனின், முறைசாரா சங்க மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், சுமைபணி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பதிவு, புதுப்பித்தல், கேட்பு மனுக்களில் ஆன்லைன் குளறுபடிகளை சரி செய்திட வேண்டும். நலவாரியத்தில் நேரடி பதிவினை தொடங்க வேண்டும். இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம், விபத்து மரணத்திற்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். நலவாரியத்தை கண்காணிக்க மாவட்ட கலெக்டர் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.