40-க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலியில் சிஐடியு தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
நெய்வேலியில் 40-க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சி.ஐ.டி.யு. தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெய்வேலி,
நெய்வேலி என்.எல்.சி.யில் உள்ள சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் சார்பில் நெய்வேலி க்யூ பாலம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் திருஅரசு, பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் கருப்பையன் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். போராட்டமானது, என்.எல்.சி.யில் ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிலுவையில் உள்ள தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை
என்.எல்.சி. வேலை வாய்ப்பில் தமிழகத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிப்பது, வீடு, நிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்குதல், என்.எல்.சி. பொது மருத்துவமனையில் தரமான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட வேண்டும்.
நெய்வேலி நகரில் குடிநீர் வினியோகத்தை முன்பு இருந்ததைப் போல நேரத்தை அதிகப்படுத்தி தர வேண்டும், என்.எல்.சி. தொழிலாளர்களின் குடியிருப்புகளின் மேல் தளம் மற்றும் பராமரிப்பு பணிகளை நகர நிர்வாகம் விரைந்து செய்து தர வேண்டும்.
வெள்ளை அறிக்கை
அனல் மின் நிலையங்களில் தொடர் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும், சுரங்க பராமரிப்பில் அக்கறை காட்டுதல், அனல் மின் நிலையங்கள், சுரங்கங்களுக்கு தொழிலாளர்கள் பணிக்கு செல்லும் நேரங்களில் இயக்கப்படும் சாம்பல் லாரிகளை நிறுத்த வேண்டும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்புகளை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு போராட்டமானது நிறைவு பெற்றது. சிறப்பு தலைவர் கண்ணன் உண்ணாவிரத்தை முடித்து வைத்து பேசினார். இதில் சங்க நிர்வாகிகள் பாலமுருகன், ஆரோக்கியதாஸ், குமார், திருவேங்கடம், பழனிவேல், சாமுவேல் புண்ணியமூர்த்தி வீராசாமி, முருகன், ரமேஷ், மூத்த நிர்வாகிகள் முத்துவேல், வேல்முருகன், குப்புசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அலுவலக செயலாளர் வேலாயுதம் நன்றி கூறினார்.