மாவட்ட நல வாரிய அலுவலகம் முன்புசி.ஐ.டி.யு.வினர் முற்றுகை போராட்டம்
கடலூர் மாவட்ட நல வாரிய அலுவலகத்தை சி.ஐ.டி.யு.வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திரண்டனர்
கட்டுமானம் உள்ளிட்ட அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் பொங்கல் தொகுப்பு, தரமான வேட்டி, சேலை மற்றும் ஊக்கத்தொகை ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். கட்டுமானம் நல வாரியத்தில் பணப்பயன் சலுகைகள் வழங்குவதை போல் மற்ற அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் உயர்த்தி வழங்க வேண்டும்.
விசாரணை என்ற பெயரில் ஏற்கனவே பெற்று வந்த ஓய்வூதியத்தை முடக்கும் போக்கை கைவிட வேண்டும். ஆன்லைன் பதிவு குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு.வினர் கடலூர் செம்மண்டலம் தீபன்நகரில் உள்ள மாவட்ட நல வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
முற்றுகை போராட்டம்
அதன்படி நேற்று மாவட்ட நல வாரிய அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கான சி.ஐ.டி.யு.வினர், தொழிலாளர்கள் திரண்டனர். தொடர்ந்து அவர்கள் நல வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் கருப்பையன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணை தலைவர்கள் ஆளவந்தார், சுப்புராயன், சீனுவாசன், சங்கமேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்ட இணை செயலாளர் பாபு, இணை செயலாளர் ராஜேஷ்கண்ணன், சாந்தகுமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தால் நல வாரிய அலுவலகத்துக்கு செல்ல முடியாமல், மற்ற தொழிலாளர்கள் சிரமப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் வடக்கு வாசல் வழியாக சென்றனர். இருப்பினும் இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.