நகரமன்ற கூட்டம்
திருக்கோவிலூரில் நகரமன்ற கூட்டம் நடந்தது.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் நகராட்சி அலுவலகத்தில் நகரமன்ற கூட்டம் நடந்தது. இதற்கு நகர மன்ற தலைவர் டி.என்.முருகன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் உமா மகேஸ்வரி குணா முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் கீதா வரவேற்றார். கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் பலரும் தங்கள் பகுதியில் தேவைப்படும் வளர்ச்சி திட்டபணிகள் குறித்தும், நாய்கள் மற்றும் குரங்குகள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினர். தொடர்ந்து திருக்கோவிலூர் அரசு மருத்துவமனை அருகில் பழுதடைந்துள்ள டாக்டர்கள் குடியிருப்பு வளாகம் அரசு பதிவேட்டின் படி வனத்துறைக்கு சொந்தமான இடம் என உள்ளது. இந்த இடத்தை அரசு மருத்துவமனையின் பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் வகையில் பெயர் மாற்றி வழங்க அரசுக்கு பரிந்துரை செய்வது, அவ்வாறு பெயர் மாற்றி வழங்கும்போது தற்போது அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிற நிலையில் பழுதடைந்த டாக்டர்கள் குடியிருப்பு பகுதியில் புதிய கட்டுமான பணிகள் தொடங்க வேண்டும், சந்தைப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் பின்பகுதியில் உள்ள ஆபீசர்ஸ் கிளப் அமைந்துள்ள இடத்தில் உழவர் சந்தை அமைக்க தேவையான இடத்தை ஒதுக்கீடு செய்து மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நகராட்சி கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.