சாலையில் படுத்து பொதுமக்கள் மறியல்


சாலையில் படுத்து பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 24 Jan 2023 12:15 AM IST (Updated: 24 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பொது வழிப்பாதை பிரச்சினையை தீர்க்க கோரி கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்பு தேசிய நெடுஞ்சாலையில் படுத்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி

பொது வழிப்பாதை பிரச்சினையை தீர்க்க கோரி கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்பு தேசிய நெடுஞ்சாலையில் படுத்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

பொது வழி பிரச்சினை

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள நரால்சந்தம்பட்டியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள், தங்கள் கிராமத்தில் இருந்து மத்தூர்-குள்ளம்பட்டி சாலைக்கு செல்லும் பொது வழிப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த பாைத 2 பேருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பாதை வழியாகத்தான் பொதுமக்கள் சென்று வந்தனர்.

இந்த நிலையில், அப்பகுதியில் குள்ளம்பட்டி ஊராட்சி சார்பில் சாலை அமைக்க பணிகள் தொடங்கப்பட்டது. இந்த பாதையில் உள்ள பட்டா நிலங்களின் உரிமையாளர்கள், சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் தங்களுக்கு சொந்தமான பட்டா நிலத்தில் மண், கற்களையும் கொட்டி உள்ளனர். இதையடுத்து நரால்சந்தம்பட்டி பொதுமக்கள், தங்களுக்கு அந்த பாதையிலேயே சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.

சாலை மறியல்

இந்த நிலையில் பொது வழிப்பாதை பிரச்சினையை தீர்க்க கோரி நேற்று அந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகம் அருகே ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இவர்களில் சிலர் சாலையில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றும் செல்ல முடியாமல் போக்குவரத்தில் சிக்கியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களை குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர்.

12 பேர் கைது

பின்னர் போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். தொடர்ந்து மறியலில் ஈடுபட்டதாக நரால்சந்தம்பட்டியை சேர்ந்த 12 பேரை கைது செய்தனர். இந்த சாலை மறியல் காரணமாக கலெக்டர் அலுவலக பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story