தக்கலை அருகே அதிக பாரத்துடன் சென்ற 12 லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்


தக்கலை அருகே  அதிக பாரத்துடன் சென்ற 12 லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 14 Jun 2023 12:15 AM IST (Updated: 14 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தக்கலை அருகே அதிக பாரத்துடன் சென்ற 12 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர். இதையடுத்து அந்த லாரிகளை போலீசார் மீட்டு ரூ.7¾ லட்சம் அபராதம் விதித்தனர்.

கன்னியாகுமரி

தக்கலை:

தக்கலை அருகே அதிக பாரத்துடன் சென்ற 12 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர். இதையடுத்து அந்த லாரிகளை போலீசார் மீட்டு ரூ.7¾ லட்சம் அபராதம் விதித்தனர்.

அதிக பாரத்தில் கனிமவளம்

கேரளாவுக்கு தினமும் குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து லாரிகளில் அதிகளவு கனிமவளங்கள் கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு செல்லும் லாாிகளால் போக்குவரத்து நெருக்கடியும், விபத்தும் ஏற்பட்டு வருகிறது. இதனால் கனிம வளங்களை கேரளாவுக்கு கொண்டு செல்ல அரசு அனுமதிக்கக்கூடாது என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து கனிமவளங்களை அதிக பாரத்தில் ஏற்றி செல்லும் லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகிறார்கள். அவ்வாறு அபராதம் விதிக்கப்படுவதால் சில லாரிகள் இரவு நேரத்தில் கிராம சாலைகள் வழியாக கனிம வளங்களை கொண்டு செல்கின்றன.

12 லாரிகள் சிறைபிடிப்பு

இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு வழியாக வழக்கம்போல் அதிக பாரத்துடன் 12 லாரிகள் கேரளாவுக்கு சென்று கொண்டிருந்தன. இதை பார்த்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் கனிம வளங்களை ஏற்றி சென்ற 12 லாரிகளையும் சிறைபிடித்தனர். இதன் காரணமாக லாரி டிரைவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரூ.7¾ லட்சம் அபராதம்

இதுகுறித்து தகவல் அறிந்த தக்கலை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி, லாரிகளை சோதனை செய்தனர். இதில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரத்தில் கனிமவளங்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பொதுமக்கள் சிறைபிடித்த 12 லாரிகளையும் மீட்டு தக்கலை போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர் அந்த லாரிகளுக்கு மொத்தம் ரூ.7 லட்சத்து 83 ஆயிரம் அபராதம் விதித்தனர். இந்த சம்பவத்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story