கோழிக்கழிவை ஏற்றிச்சென்ற வேனை சிறைபிடித்த பொதுமக்கள்


கோழிக்கழிவை ஏற்றிச்சென்ற வேனை சிறைபிடித்த பொதுமக்கள்
x

திற்பரப்பு அருகே பன்றிப்பண்ணைக்கு கோழிக்கழிவுகள் ஏற்றிச் சென்ற வேனை பொதுமக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி

குலசேகரம்:

திற்பரப்பு அருகே பன்றிப்பண்ணைக்கு கோழிக்கழிவுகள் ஏற்றிச் சென்ற வேனை பொதுமக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பன்றிப்பண்ணை

திற்பரப்பு அருகே பிணந்தோடு மாஞ்சக்கோணம் குளக்கரையில் தனியாருக்கு சொந்தமான ஒரு பன்றிப்பண்ணை உள்ளது. இந்த பண்ணையில் 100-க்கும் மேற்பட்ட பன்றிகள் வளர்க்கப்படுவதாக கூறப்படுகிறது. மக்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகில் பன்றிப்பண்ணை உள்ளதாலும், இந்த பண்ணையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், அருகில் உள்ள ஓடையில் கலந்து திற்பரப்பு ஆற்றில் பாய்வதாகவும் இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த பன்றிப் பண்ணையை அகற்றக்கோரி அந்த பகுதி மக்கள் திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறையினரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். அதைதொடர்ந்து திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பன்றிப் பண்ணையை அகற்ற அதன் உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனாலும், பன்றிப்பண்ணை அகற்றப்படவில்லை.

வேனை சிறை பிடித்த மக்கள்

இந்தநிலையில் நேற்று மாலையில் அந்த பன்றி பண்ணைக்கு கோழிக்கழிவுகளை ஏற்றிக் கொண்டு பிணந்தோடு சாஸ்தா கோவில் சாலை வழியாக ஒரு வேன் சென்றது. அப்போது வேனிலிருந்து கோழிக்கழிவுகள் சாலையோரத்தில் உள்ள வீடுகளின் முன்பு சிதறி விழுந்தது. இதனால், அங்கு துர்நாற்றம் வீசியது.

பின்னர், அந்த வேன் பண்ணைக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது, திடீரென அந்த பகுதி மக்கள் ஒன்றுதிரண்டு வேனை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திற்பரப்பு பேரூராட்சி 3-வது வார்டு கவுன்சிலர் ராஜ்குமார், திற்பரப்பு பேரூர் தி.மு.க. செயலாளர் ஜாண் எபனேசர் ஆகியோர் இதுபற்றி குலசேகரம் போலீஸ் நிலையத்துக்கும், சுகாதாரத் துறையினருக்கும், பேரூராட்சி நிர்வாகத்திற்கும் தெரிவித்தனர். இதற்கிடையே வேன் டிரைவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த 2 போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைதொடர்ந்து போலீசார் வேனை கைப்பற்றி குலசேகரம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து 2½ மணிநேரமாக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


Next Story