கற்களை ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்
நாகர்கோவில் அருகே கற்களை ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் மீண்டும் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே கற்களை ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் மீண்டும் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
லாரி சிறைபிடிப்பு
நாகர்கோவில் அருகே உள்ள கோதைகிராமத்தில் குறுகிய சாலை உள்ளது. இந்த சாலை வழியாக கனரக வாகனங்கள் கற்கள் மற்றும் மணல் ஏற்றிக்கொண்டு செல்கின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு கற்களை ஏற்றி சென்ற லாரி, இருசக்கர வாகனம் மீது மோதியதில் அந்த வாகன ஓட்டுனர் படுகாயம் அடைந்தார். இதனால் இந்த சாலை வழியாக கனரக வாகனங்களை இயக்கக்கூடாது என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.
மேலும் அந்த வழியாக சென்ற லாரியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்ட அந்த லாரி விடுவிக்கப்பட்டது.
சிறைபிடித்த பொதுமக்கள்
இந்த நிலையில் நேற்று மீண்டும் கோதை கிராமத்தில் உள்ள அந்த சாலை வழியாக கற்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் ஆத்திரம் அடைந்து லாரியை சிறைபிடித்து போராட்டம் நடத்தினா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த கோட்டார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பகல் நேரங்களில் இனி கனரக வாகனங்கள் இந்த சாலை வழியாக செல்லாது என்றும், மீறி சென்றால் அந்த லாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் லாரியை விடுவித்தனர்.