பாதுகாப்பற்ற நிலையில் வசிக்கும் பொதுமக்கள்
கூடலூரில் நிலங்கள், வீடுகளில் விரிசல் ஏற்பட்டு உள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பற்ற நிலையில் வசித்து வருகின்றனர்.
கூடலூர்,
கூடலூரில் நிலங்கள், வீடுகளில் விரிசல் ஏற்பட்டு உள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பற்ற நிலையில் வசித்து வருகின்றனர்.
விரிசல்
கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட நடு கூடலூர் மற்றும் ராஜகோபாலபுரம் பகுதியில் நிலங்களில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் தெய்வமலை என்ற இடத்தில் 80 மீட்டர் நீளத்துக்கு சாலை விரிசல் அடைந்து உள்ளது. இதனால் புவியியல், இந்திய மண் மற்றும் நீர் பாதுகாப்பு மேலாண்மை துறையினர் 2 நாட்களாக ஆய்வு நடத்தினர்.
பின்னர் பலத்த சேதம் அடைந்த வீடுகளை பார்வையிட்டனர். தொடர்ந்து அதிக மழை பெய்துள்ளதால் தண்ணீர் முறையாக செல்வதற்கு வழி இல்லாமல் பூமிக்கு அடியில் நீரோட்டம் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அழுத்தம் ஏற்பட்டு நிலங்கள், வீடுகளில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. மேலும் நிலச்சரிவு ஏற்படுவதற்கான முதல் அறிகுறி என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே பாதிக்கப்பட்ட மக்கள் தனியார் திருமண மண்டபம் மற்றும் உறவினர் வீடுகளில் தங்கி வருகின்றனர்.
வாடகை வீடுகள்
இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலான மக்கள் தங்களது சொந்த வீடு உருக்குலைந்து விட்டதை கண்டு கலக்கத்துடன் உள்ளனர். தொடர்ந்து பாதுகாப்பற்ற நிலை உள்ளதால் சொந்த வீடுகளில் வசிக்க முடியாமல் உள்ளது. இதனால் குழந்தைகள், குடும்பத்தினருடன் நிம்மதியை இழந்துள்ளனர். தொடர்ந்து சொந்த வீடுகளை விட்டு, வாடகை வீடுகளை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
தொடர்ந்து மழை இல்லா விட்டாலும் விரிசல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வீடுகள் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இன்னும் பலர் வீடுகளில் விரிசல் ஏற்பட்டாலும், வேறு இடத்துக்கு பெயர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என எண்ணி பாதுகாப்பற்ற சூழலில் வீடுகளில் வசித்து வருகின்றனர். நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதியான நடுக்கூடலூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்றிடம் ஒதுக்கி வீடுகள் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.