வட்டார வளர்ச்சி அலுவலர் வாகனத்தை சிறைபிடித்த பொதுமக்கள்
ஆம்பூர் அருகே வட்டார வளர்ச்சி அலுவலர் வாகனத்தை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த வடகரை பகுதியில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அருகே உள்ள இடத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்காக தாசில்தார் மற்றும் அதிகாரிகள் தேர்வு செய்தனர்.
இந்தநிலையில் அங்கு பணியை தொடங்குவதற்காக பொக்லைன் எந்திரம் வந்துள்ளது. அப்போது அப்பகுதியை சேர்ந்த மக்கள் இந்த இடத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்டக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரத்தை திருப்பி அனுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் மற்றும் உமராபாத் போலீசார் அங்கு வந்தனர். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் வாகனத்தை பொதுமக்கள் சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.