ஏற்றுமதி நிறுவனத்தில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறிவாலிபரிடம் ரூ.6 லட்சம் மோசடி


ஏற்றுமதி நிறுவனத்தில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறிவாலிபரிடம் ரூ.6 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 21 Jan 2023 12:15 AM IST (Updated: 21 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஏற்றுமதி நிறுவனத்தில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி தேனி வாலிபரிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி

தனியார் நிறுவன அதிகாரி

தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டி தந்தை பெரியார் 2-வது தெருவை சேர்ந்த மைக்கேல் மகன் அருள் ஆரோக்கிய செபாஸ்டின் (வயது 32). இவர் புதுச்சேரியில் ஒரு தனியார் நிறுவனத்தில் உதவி பொது மேலாளராக பணியாற்றி வருகிறார். அவர் தேனி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

கடந்த ஆண்டு நான் 'யூ-டியூப்' பார்த்துக் கொண்டு இருந்தபோது அதில் வந்த விளம்பரத்தை தொட்டதும், ஒரு செயலி பதிவிறக்கம் ஆனது. அதில் செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்தேன். சில நாட்களுக்கு பிறகு வினோதினி என்ற பெயரில் ஒருவர் எனது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். அவர், தூத்துக்குடியில் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருவதாகவும், தனது அலுவலகத்துக்கு நேர்முக உதவியாளர் ஒருவர் தேவைப்படுவதாகவும் கூறினார். அந்த பணிக்கு நான் செல்ல விரும்பி எனது விவரங்களை மின்னஞ்சலில் அனுப்பி வைத்தேன்.

ரூ.6 லட்சம் மோசடி

பின்னர் நிறுவனத்தில் பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக கூறி, தூத்துக்குடி துறைமுகத்துக்கு 6 கன்டெய்னர்களில் சரக்கு ஏற்றி இருப்பதாகவும், அதற்கு எடை பார்க்கும் கட்டணம் மட்டும் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார். அதற்கான பணத்தை முகமது பைசல் என்பவரின் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைத்தேன். பின்னர், ஒரகடம், ரேணுகுண்டா, ஓசூர், நாமக்கல்லில் இருந்து 44 லோடு வந்திருப்பதாக கூறி பணம் கேட்டனர். அதற்கும் பணம் அனுப்பி வைத்தேன். அந்த வகையில் ரூ.6 லட்சத்து 5 ஆயிரம் அனுப்பி இருந்தேன். அந்த பணத்தை திருப்பிக் கேட்டபோது, பல்வேறு காரணங்கள் கூறி திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்து விட்டனர். மோசடி செய்த நபர்களை நேரில் பார்த்ததில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

அதன்பேரில், இந்த மோசடி குறித்து தேனி சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாமரைக்கண்ணன் வழக்குப்பதிவு செய்தார். மோசடி செய்தவர்கள் பயன்படுத்திய செல்போன் எண், வங்கிக் கணக்கு விவரம், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story