சாயர்புரத்தில் கருப்பு உருவம் சொன்னதாக கூறி பள்ளிக்கூட மாடியில் இருந்து கீழே குதித்த பிளஸ்-1 மாணவி


சாயர்புரத்தில் கருப்பு உருவம் சொன்னதாக கூறி  பள்ளிக்கூட மாடியில் இருந்து  கீழே குதித்த பிளஸ்-1 மாணவி
x
தினத்தந்தி 18 Nov 2022 12:15 AM IST (Updated: 18 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

சாயர்புரத்தில் கருப்பு உருவம் சொன்னதாக கூறி பள்ளிக்கூட மாடியில் இருந்து கீழே குதித்த பிளஸ்-1 மாணவி படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தூத்துக்குடி

சாயர்புரம்:

கருப்பு உருவம் சொன்னதாக கூறி, பள்ளிக்கூட மாடியில் இருந்து கீழே குதித்த பிளஸ்-1 மாணவி படுகாயம் அடைந்தார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பிளஸ்-1 மாணவி

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில் உள்ள ஒரு பள்ளியில் 16 வயது மாணவி ஒருவர் பிளஸ்-1 படித்து வருகிறார். மாணவி அந்த பள்ளி விடுதியில் தங்கி இருந்து வகுப்புக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி வீட்டில் இருந்து அவர் பள்ளிக்கு சென்றார். காலை 11.30 மணியளவில் இடைவேளையின்போது பள்ளியின் மாடிக்கு சென்றுள்ளார். பின்னர் அவர், திடீரென மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் அவருடைய காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்ததும் மற்ற மாணவிகள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தீவிர சிகிச்சை

உடனே, அந்த மாணவியை தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கிருந்து நெல்லையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுபற்றி அந்த மாணவியின் தந்தை சாயர்புரம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் பரபரப்பு தகவலை கூறியிருந்தார். அதாவது, கருப்பு நிறம் கொண்ட உருவம் என்னை மாடியில் இருந்து குதிக்க சொன்னது. அதனால் மாடியில் இருந்து குதித்து விட்டேன், என மகள் கூறினாள், என அதில் குறிப்பிட்டுள்ளார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மேரி ஜேமீந்தா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

போலீஸ் சூப்பிரண்டு பேட்டி

இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கூறியதாவது:-

மாணவிக்கு ஏற்கனவே மனதளவில் லேசான பாதிப்பு இருந்துள்ளது. இதற்காக மாணவி சித்தா சிகிச்சை பெற்று உள்ளார். இதனால் விடுதியில் இருந்த மாணவி, தினமும் வீட்டில் இருந்து பள்ளிக்கூடத்துக்கு சென்று வந்து உள்ளார்.

இந்த பாதிப்பு காரணமாக மாணவி மாடியில் இருந்து குதித்து இருப்பதாக தெரிகிறது. தற்போது மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உடல்நிலை குணமடைந்த பிறகு, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி மூலம் கவுன்சிலிங் மற்றும் சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளிக்கூட மாடியில் இருந்து பிளஸ்-1 மாணவி கீழே குதித்து படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story