மேளம் அடிப்பது தொடர்பாக காவடி பக்தர்களிடையே மோதல்
பழனி திருஆவினன்குடி கோவில் பகுதியில் மேளம் அடிப்பது தொடர்பாக காவடிக்குழு பக்தர்களிடையே திடீர் மோதல் ஏற்பட்டது.தேங்காய்களை தூக்கி வீசியதில் சிலர் காயம் அடைந்தனர்.
தைப்பூச திருவிழா
பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. அதன்படி இந்த ஆண்டு தைப்பூச திருவிழா கடந்த ஜனவரி மாதம் 29-ந்தேதி தொடங்கி நேற்று முன்தினம் வரை நடைபெற்றது. திருவிழாவையொட்டி கடந்த மாத தொடக்கம் முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் திருவிழா முடிந்தாலும் பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது.
குறிப்பாக பாதயாத்திரையாகவும், மயில்காவடி எடுத்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதில் மயில்காவடி எடுத்து வரும் பக்தர்கள் பழனி நகர் பகுதியில் மேள தாளத்துடன் ஆடியபடி ஊர்வலமாக செல்வார்கள். அவர்கள் உபகோவில்களான பெரியநாயகி அம்மன் கோவில், திருஆவினன்குடி கோவில் வழியாக கிரிவீதிகளில் வலம் வந்து மலைக்கோவிலுக்கு சென்று வழிபட்டு வருகின்றனர்.
பக்தர்கள் குழுவினர் மோதல்
அதன்படி நேற்று கோவை பகுதியை சேர்ந்த பக்தர்கள் குழுவினர் திருஆவினன்குடி கோவில் வெளிபகுதியில் மயில் காவடிகளுடன் மேளம் அடித்து ஆடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு எடப்பாடி பகுதியை சேர்ந்த பக்தர்கள் சிலர் மயில் காவடிகளுடன் வந்தனர். பின்னர் அவர்கள் மேளம் இசைத்து காவடிகளுடன் ஆட முற்பட்டனர். அப்போது மேளம் இசைத்து ஆடுவது தொடர்பாக இருதரப்பு பக்தர்கள் குழுவினரிடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் அவர்களுக்கு இடையே மோதலாக மாறியது. அப்போது இரு தரப்பு பக்தர்களும் கையில் வைத்திருந்த மேள கம்புகள் மற்றும் தேங்காய்களை தூக்கி வீசினர். இதில் அங்கிருந்த பக்தர்கள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பக்தர்கள் குழுவினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தால் அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது. தகவலறிந்த அடிவாரம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு விரைந்து வந்தனர்.
போலீசார் விசாரணை
பின்னர் இரு தரப்பு பக்தர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோக செய்தனர். இதற்கிடையே பக்தர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் குறித்த வீடியோ வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. பழனியில் மேளம் அடித்து ஆடுவது தொடர்பாக பக்தர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.