ஸ்ரீரங்கம் கோவிலில் மோதல் சம்பவம்: ஆந்திர பக்தர்கள் 30 பேர் மீது வழக்கு
ஸ்ரீரங்கம் கோவிலில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக ஆந்திர பக்தர்கள் 30 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருச்சி,
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நேற்று முன்தினம் இரவு திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. அன்று காலை ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். மூலஸ்தானம் முன்பு உள்ள காயத்ரி மண்டபத்தில் வரிசையில் காத்திருந்த அவர்கள் திடீரென உண்டியலை தட்டி கோவிந்தா, கோவிந்தா என்று கோஷங்களை எழுப்பினார்கள்.
இதை கண்ட காவலாளி விக்னேஷ் (29) அவர்களை தட்டிக்கேட்டார். இதனால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் காவலாளிகள் விக்னேஷ், செல்வகுமார் (34), பாரதி (33) ஆகியோர் அய்யப்ப பக்தர்களை தாக்கினர். இதில் அய்யப்ப பக்தர்கள் சந்திரசென்னாராவ் (30), கட்டாராமு ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அதில் ஒருவருக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது.
அய்யப்ப பக்தர்கள் மீதும் வழக்கு
பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து இருதரப்பினரும் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அய்யப்ப பக்தர்கள் சந்திரசென்னாராவ் கொடுத்த புகாரின் பேரில் கோவில் காவலாளிகள் 3 பேர் மீதும் நேற்று முன்தினம் மதியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.
இந்த நிலையில் கோவில் காவலாளி விக்னேஷ் கொடுத்த புகாரின் பேரில் அய்யப்ப பக்தர் சந்திர சென்னாராவ், கட்டாராமு உள்பட 30 பேர் மீதும் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவில் வழக்குப்பதிவு செய்தனர்.