வேளச்சேரி கல்லூரி மாணவர்கள் இடையே மோதல்: நாட்டு பட்டாசு வீசிய வழக்கில் 9 பேர் கைது
வேளச்சேரி கல்லூரியில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் பட்டாசு கொளுத்தி வீசிய வழக்கில் இரு தரப்பை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிண்டி,
சென்னை கிண்டி வேளச்சேரி சாலையில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மைலாப்பூர் பகுதியை சேர்ந்த தனுஷ்குமார் என்ற 3-ம் ஆண்டு பொருளாதாரம் படிக்கும் மாணவரை தாவரவியல் பிரிவு மாணவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, கடந்த 18-ந்தேதி தனுஷ்குமார் தன்னை தாக்கிய தாவரவியல் பிரிவு மாணவர்கள் நோக்கி 2 நாட்டு பட்டாசுகளை வீசியதாக தெரிகிறது. கல்லூரி வளாகத்தில் பட்டாசு விழுந்து வெடித்ததில் யாருக்கும் எந்த வித காயமும் ஏற்படவில்லை.
9 பேர் கைது
இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் விரைந்து வந்த கிண்டி போலீசார் வெடிகளை கைப்பற்றி மாணவர்களிடம் விசாரணையில் ஈடுபட்டனர். இந்த. விவகாரத்தில் கல்லூரியில் மோதலில் ஈடுபட்டது தொடர்பாக இருதரப்பையும் சேர்ந்த 18 மாணவர்களை கல்லூரியில் இருந்து நீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது. இது தொடர்பாக கிண்டி உதவி போலீஸ் கமிஷனர் சிவா, இன்ஸ்பெக்டர் பிரவின் ராஜேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் நாட்டு பட்டாசு கொளுத்தி வீசிய மாணவர்கள் உள்பட மோதலில் ஈடுபட்ட இரு தரப்பையும் சேர்ந்த தனுஷ்குமார், விகாஷ், மணிகண்டன், தனுஷ், வருண், சுந்தர், அய்யப்பன், மதன், யுவராஜ் ஆகிய 9 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.