போலீசார்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இடையே தள்ளு முள்ளு


போலீசார்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இடையே தள்ளு முள்ளு
x

ஒரத்தநாட்டில் மதுக்கடையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் போலீசார்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இ்ந்த போராட்டத்தில் ஈடுபட்ட 42 ேபரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்

ஒரத்தநாட்டில் மதுக்கடையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் போலீசார்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இ்ந்த போராட்டத்தில் ஈடுபட்ட 42 ேபரை போலீசார் கைது செய்தனர்.

மதுக்கடையை மூடக்கோரி போராட்டம்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு கடைத்தெரு மன்னார்குடி பிரிவு சாலை முக்கத்தில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் மதுக்கடை பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி அந்த மதுக்கடையினை மூடக்கோரி மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு செய்திருந்தனர்.

இதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி ஒரத்தநாடு தாசில்தார் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில் சம்பந்தப்பட்ட கடையினை ஒரு மாதத்திற்குள் அங்கிருந்து அகற்றிக்கொள்வதாக அரசு தரப்பில் எழுத்துப் பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அதன்படி அந்த மதுக்கடை மூடப்படாததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், அகில இந்திய மாதர் சங்க துணைத்தலைவருமான வாசுகி தலைமையில் நேற்று அந்த மதுக்கடையை மூடக்கோரி பூட்டு போடும் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.

ஊர்வலமாக வந்தனர்

அதன்படி கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நீலமேகம், சுரேஷ்குமார், கண்ணன், ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ஏசுராஜா, ஒன்றிய விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் பாஸ்கர் மற்றும் கட்சி நிர்வாகிகள் மதுக்கடையை மூடக்கோரி கோஷமிட்டபடி ஊர்வலமாக வந்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஒரத்தநாடு துணை போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னா, இன்ஸ்பெக்டர் அன்பழகன் உள்ளிட்ட போலீசார் தடுப்பு கட்டைகளை அமைத்து அவர்களை தடுத்தனர்.

வாக்குவாதம்-தள்ளுமுள்ளு

ஆனாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போலீசாரின் தடுப்புகளை தாண்டி மதுக்கடைக்கு எதிரே அமர்ந்து மதுக்கடையை மூடக்கோரி கோஷமிட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதமும், தள்ளு-முள்ளுவும் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒரத்தநாடு தாசில்தார் சுரேஷ், தஞ்சை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் செல்வபாண்டி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மதுக்கடை செயல்படக்கூடிய கட்டிடத்தின் உரிமையாளர் தொடர்ந்த வழக்கில் மதுரை ஐகோர்ட்டு கிளை இந்த மதுக்கடையினை அகற்ற தடை விதித்திருப்பதாகவும், இதனை சட்டப்படி அணுகி கடையினை விரைவாக வேறு இடத்திற்கு மாற்றம் செய்து கொள்வதாகவும் தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்டு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் அங்கிருந்து கலைந்து செல்வதாக அறிவித்தனர்.

42 பேர் கைது

அந்த நேரத்தில் ஒரத்தநாடு துணை போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னா, அனைவரையும் கைது செய்வதாக அறிவித்தார். இதனால் போலீசாருக்கும், கட்சி பிரமுகர்களுக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து போலீசார் மதுக்கடைக்கு முன்பு அமர்ந்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரை வலுக்கட்டாயமாக கைது செய்து குண்டு கட்டாக தூக்கிச் சென்று வேனில் ஏற்றினர்.

இதற்கு கட்சி பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் போட்டனர். இருப்பினும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி உள்ளிட்ட 42 பேரை போலீசார் கைது செய்து ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவத்தால் நேற்று ஒரத்தநாட்டில் பரபரப்பு நிலவியது.


Next Story