மாநகராட்சி அலுவலகத்தில் கோஷ்டி மோதல்: கவுன்சிலர் உள்பட 13 பேர் மீது வழக்கு
மாநகராட்சி அலுவலகத்தில் கோஷ்டி மோதல் தொடா்பாக கவுன்சிலர் உள்பட 13 பேர் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடலூர் மாநகராட்சி கூட்டம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்தது. இந்த கூட்டத்திற்கு 43-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் பாரூக் அலி மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தார். அப்போது 42-வது வார்டு கவுன்சிலர் விஜயலட்சுமியின் கணவர் செந்தில் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து, மாநகராட்சி தேர்தலில் கீதா குணசேகரனுக்கு ஆதரவாக ஏன் செயல்பட்டாய் என்று கூறி பாரூக் அலியை தாக்கி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட தி.மு.க. கவுன்சிலர்கள், செந்திலை கைது செய்ய வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் செந்தில் உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதேபோல் பாரூக் அலி தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து தன்னை தாக்கியதாக செந்தில் கொடுத்த புகாரின் பேரில் கவுன்சிலர் பாரூக் அலி உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாநகராட்சி அலுவலகத்தில் கோஷ்டி மோதலில் ஈடுபட்டது தொடர்பாக கவுன்சிலர் மற்றும் பெண் கவுன்சிலரின் கணவர் உள்ளிட்ட 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.