கோவில் திருவிழா நடன நிகழ்ச்சியில் கோஷ்டி மோதல்
கே.வி. குப்பம்அருகே கோவில்திருவிழாவில் நடந்த நடன நிகழ்ச்சியில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் இன்ஸ்பெக்டர் காரை முற்றுகையிட்டனர்.
கோஷ்டி மோதல்
கே.வி.குப்பம் அடுத்த நீலகண்ட பாளையம் கிராமத்தில் கடந்த 29-ந் தேதி கெங்கை அம்மன் திருவிழா நடைபெற்றது. 30-ந் தேதி இரவு நடன நிகழ்ச்சி நடந்தது. அப்போது உற்சாக மிகுதியில் வாலிபர்கள் பலர் ஆட்டம் போட்டனர். பார்வையாளர் வரிசையில் இருந்த ஒரு பெண் மீது ஒரு வாலிபரின் கை பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
இதனால், அருகில் இருந்த அந்த பெண்ணின் மகன், அந்த வாலிபரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு தள்ளு முள்ளு, கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
இன்ஸ்பெக்டர் கார் முற்றுகை
இது தொடர்பாக விசாரணை செய்து, சம்பந்தப்பட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்தை, நேற்று இரவு சுமார் 75-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் திரண்டனர்.
அங்கு வெளியில் செல்ல தயாராக இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரியின் காரை முற்றுகையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை வைத்தனர். இதனால் போலீஸ் நிலைய வாசலில் பரபரப்பாக காணப்பட்டது.