துப்பட்டாவால் கட்டிப்போட்டு 10-ம் வகுப்பு மாணவி பலாத்காரம்
ஸ்ரீமுஷ்ணம் அருகே துப்பட்டாவால் கட்டிப்போட்டு 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த என்ஜினீயர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சேத்தியாத்தோப்பு:
ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் தனபால் மகன் பாலக்குமார் (வயது 25). என்ஜினீயரிங் படித்துள்ள இவர், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இவர் சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த, கடலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் 14 வயதுடைய மாணவியின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு மாணவியிடம் படிப்பதற்கு புத்தகம் வேண்டும் என்றும், அதனை எடுத்துக் கொண்டு தனது வீட்டுக்கு வருமாறும் கூறினார்.
மாணவி பலாத்காரம்
இதை நம்பிய மாணவியும், புத்தகத்துடன் பாலக்குமார் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு தனியாக இருந்த பாலக்குமார் திடீரென மாணவியை ஒரு அறையில் வைத்து கதவை பூட்டினார். பின்னர் அவர், துப்பட்டாவால் மாணவியின் கையை கட்டியுள்ளார்.
தொடர்ந்து வாயை பொத்தி, பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதில் மாணவி கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த பாலக்குமார், அவரது கன்னத்தில் அடித்ததாக கூறப்படுகிறது.
சிகிச்சை
இதையடுத்து பாலக்குமார் கட்டை அவிழ்த்து விட்டதும், வீட்டுக்கு வந்த மாணவி நடந்த சம்பவம் குறித்து தனது பாட்டியிடம் கூறி கதறி அழுதுள்ளார். உடனே அவர், மாணவியை சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த டாக்டர்கள், மாணவிக்கு சிகிச்சை அளித்ததோடு போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீசார் விரைந்து சென்று, மாணவியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் பாலக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.