96 மையங்களில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு; 22,767 பேர் எழுதினா்


96 மையங்களில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு; 22,767 பேர் எழுதினா்
x

நெல்லை மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை 22,767 மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை 22,767 மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.

பொதுத் தேர்வு

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இதற்காக நெல்லை மாவட்டத்தில் 96 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு மொத்தம் 1,185 தேர்வு அறைகள் தயார் செய்யப்பட்டிருந்தது.

இதையொட்டி நேற்று காலை தேர்வு மையங்களுக்கு மாணவ-மாணவிகள் வந்தனர். அவர்கள் அந்தந்த பள்ளியில் கூட்டு வழிபாட்டில் ஈடுபட்டனர். முன்னதாக சிலர் தங்களது வழிபாட்டு ஸ்தலங்களுக்கும் சென்று வழிபட்டனர்.

665 பேர் எழுதவில்லை

நெல்லை மாவட்டத்தில் 96 தேர்வு மையங்களில் 11,825 மாணவர்கள், 11,607 மாணவிகள் என மொத்தம் 23,432 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

இவர்களில் 11,340 மாணவர்கள், 11,427 மாணவிகள் என மொத்தம் 22,767 பேர் தேர்வு எழுதினார்கள். மாணவர்கள் 485 பேர், மாணவிகள் 180 பேர் என மொத்தம் 665 பேர் தேர்வு எழுத வரவில்லை.

மாற்றுத்திறனாளி, கைதி

248 மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளும் தேர்வு எழுதினார்கள். அவர்களில் 190 மாற்று திறனாளிகள் சொல்வதை கேட்டு எழுதுவதற்கு 190 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர். 22 பார்வையற்ற மாணவ-மாணவிகளும் தேர்வு எழுதினார்கள். மேலும் பாளையங்கோட்டை மத்திய சிறை தேர்வு மையத்தில் 14 கைதிகள் தேர்வு எழுதினார்கள்.

96 முதன்மை கண்காணிப்பாளர்கள், 6 கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள், 102 துறை அதிகாரிகள், 1,234 அறை கண்காணிப்பாளர்கள், 14 பறக்கும் படை குழுக்கள், 129 நிலையான படையினர் மற்றும் 20 வழித்தட அலுவலர்கள் தேர்வு பணியில் ஈடுபட்டார்கள்.

கலெக்டர் ஆய்வு

10-ம் வகுப்பு பொதுத்தேர்வை நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார். நாங்குநேரி அருகே உள்ள சங்கர் ரெட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி மற்றும் கல்வி அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story