இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை காதலன் வெளியிட்டதால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை


இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை காதலன் வெளியிட்டதால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை
x

இன்ஸ்டாகிராமில் காதலன் புகைப்படத்தை வெளியிட்டதால் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி,

திருச்சி மாவட்டம் தா.பேட்டையை சேர்ந்தவர் மருதமுத்து. இவரது மனைவி சுபாஷினி. இவர் ஊரக வளர்ச்சி துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மருதமுத்து இறந்து விட்டார்.

இந்த தம்பதியின் மகள் யுவபிரியா (வயது 15). இவர் துறையூர் தாலுகா, கண்ணனூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் முசிறி தாலுகா திருத்தலையூர் பகுதியில் வசிக்கும் தனது பாட்டி வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார்.

இன்ஸ்டாகிராமில் புகைப்படம்

இதைத்தொடர்ந்து அவருக்கும், அப்பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து வரும் 17 வயது மாணவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. முதலில் நண்பர்களாக பழகிவந்த நிலையில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அந்த சமயத்தில் இருவரும் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளனர். இதனை சுபாஷினியும், அவரது உறவினர்களும் கண்டித்துள்ளனர்.

இந்தநிலையில் கடந்த 28-ந் தேதி யுவபிரியா பிறந்த நாளையெட்டி அவருக்கு வாழ்த்து சொல்வதற்காக கல்லூரி மாணவன் இன்ஸ்டாகிராமில் யுவபிரியாவுடன் இருக்கும் புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த யுவபிரியாவின் உறவினர்கள் மற்றும் தாயார் இதுகுறித்து யுவபிரியாவிடம் கேட்டதாக தெரிகிறது. இது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த சம்பவத்தை தொடர்ந்து மனம் உடைந்து காணப்பட்ட யுவபிரியா கடந்த 29-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைக்கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி மாணவி யுவபிரியா பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தா.பேட்டை போலீசார் யுவபிரியாவின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட மாணவன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story