வகுப்பறையில் மயங்கிவிழுந்து 10-ம் வகுப்பு மாணவன் சாவு
பனமடங்கி அரசு பள்ளியில், வகுப்பறையில் 10-ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து இறந்தான். இந்த சம்பவம் சக மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மயங்கி விழுந்தான்
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் தாலுகா லத்தேரியை அடுத்த காளாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். கூலித்தொழிலாளி. இவரது மகன் எஸ்.சூரியா (வயது 14). பனமடங்கி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று மதியம் 1.50 மணி அளவில் தமிழ் பாடவகுப்பு நடைபெற்றது. அப்போது திடீர் என்று நெஞ்சு வலிப்பதாக மாணவன் சூரியா கூறியிருக்கிறான். சற்று நேரத்தில் மயங்கி முன்பக்க மேசை மேல் விழுந்து அசைவற்று கிடந்தான்.
வகுப்பறையில் சாவு
இதுபற்றி தகவல் அறிந்ததும் சூரியாவின் மாமா வந்து, 108 ஆம்புலன்சை வரவழைத்தார். அதில் வந்த மருத்துவக்குழுவினர் மாணவனை பரிசோதனை செய்தனர். அப்போது நாடித்துடிப்பு மிகவும் குறைவாகி விட்டது. உடனடியாக முதல் உதவி செய்து, மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்குள் இறந்துவிட்டான்.
தகவல் அறிந்ததும் பனமடங்கி போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறியதாவது:-
2 முறை அறுவை சிகிச்சை
இந்த மாணவருக்கு ஏற்கனவே 8 வயதிலும், 12 வயதிலும் இரண்டுமுறை இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவர் வகுப்பில் பலவீனமாகவே இருந்துவந்தார். யாரிடமும் கடுமையாக நடந்துகொள்ள மாட்டார். நெஞ்சுவலியால் பள்ளிக்கு தொடர்ச்சியாக வருவதில்லை. அவ்வப்போது விடுமுறை எடுப்பார்.
சிறு வயதில் இருந்தே நெஞ்சு வலி கடுமையாக வரும். இதற்காக அறுவை சிகிச்சை செய்தபிறகும் மருந்து, மாத்திரைகள் எடுத்து வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில் வகுப்பறையில் எங்கள் முன்னிலையில் பாடவேளையில் சூரியா இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இந்த சம்பவம் பள்ளி மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.