10-ம் வகுப்பு மாணவர் லாரி மோதி பலி
சின்னதாராபுரம் அருகே அரையாண்டு தேர்வு எழுதி விட்டு வீடு திரும்பிய 10-ம் வகுப்பு மாணவர் லாரி மோதி பரிதாபமாக இறந்தார்.
லாரி மோதியது
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே உள்ள சின்னபுளியம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் யுவேந்திரன் (வயது 15). இவன் எலவனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று யுவேந்திரன் பள்ளியில் அரையாண்டு தேர்வு எழுதி விட்டு மாலையில் தனது சைக்கிளில் எலவனூரில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான். அரவக்குறிச்சி-சின்னதாராபுரம் சாலையில் உள்ள எலவனூர் பிரிவில் சாலையை கடக்கும் போது அரவக்குறிச்சியில் இருந்து சின்னதாராபுரம் நோக்கி வேகமாக வந்த ஒரு லாரி யுவேந்திரன் மீது மோதியது.
பலி
இதில் பலத்த காயமடைந்து யுவேந்திரன் உயிருக்கு போராடினான். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் யுவேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக சின்னதாராபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு யுவேந்திரனை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர். இதனையடுத்து சின்ன தாராபுரம் போலீசார் யுவேந்திரன் உடலை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து தப்பியோடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். விபத்தில் யுவேந்திரன் சிக்கியபோது அவரது தம்பி தரணிக்குமார் (13) என்பவர் முன்னாள் மற்றொரு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவரும் அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.