அரசு பள்ளி விடுதியில் தங்கி படித்த 10-ம் வகுப்பு மாணவன் மர்ம சாவு
ஜமுனாமரத்தூர் அருகே அரசு பள்ளி விடுதியில் தங்கி படித்த 10-ம் வகுப்பு மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
ஜமுனாமரத்தூர் அருகே அரசு பள்ளி விடுதியில் தங்கி படித்த 10-ம் வகுப்பு மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
10-ம் வகுப்பு மாணவன்
திருவண்ணாமலை மாவட்டம் நம்மியம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சேவத்தான், தொழிலாளி. இவரது மகன் சிவகாசி. இவர் ஜமுனாமரத்தூரில் உள்ள அரசவளி அரசு பள்ளியின் விடுதியில் தங்கி 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 28-ந் தேதி இரவு 9 மணியளவில் விடுதியில் உள்ள ஆசிரியை ஒருவர், சேவத்தானை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தங்களின் மகன் சிவகாசியின் உடல்நிலை மோசமாகி முகம் வீங்கி உள்ளதால் நேரில் வந்து அவரை அழைத்து செல்லும்படி கூறியுள்ளார்.
இதையடுத்து சேவத்தான் விடுதிக்கு நேரில் சென்று பார்த்த போது அவரது மகனின் முகம் வீங்கியும், பேச முடியாமலும் மெதுவாக பேசுவதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் என்ன நடந்தது என்று சிவகாசியிடம் அவர் கேட்டு உள்ளார். அப்போது ஆசிரியை முகத்தில் இருந்த பருவை ஊசியால் குத்தியதால் முகம் வீங்கி விட்டது என்று அவர் கூறியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சிவகாசிக்கு நம்மியம்பட்டு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து சிறுவனின் முகம் மேலும் மோசமாகிவிட்டது.
போலீசார் விசாரணை
பின்னர் சிவகாசியால் பேசமுடியாமல், நடக்க முடியாமல் போனதாக தெரிகிறது.
இதையடுத்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிவகாசி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து மகனின் சாவில் சந்தேகம் உள்ளதாக சேவத்தான் நேற்று இரவு ஜமுனாமரத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் மர்மச்சாவாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.