சாலையோர கடையில் குளிர்பானம் குடித்த 7-ம் வகுப்பு மாணவி 'திடீர்' மயக்கம் எடப்பாடி அரசு பள்ளியில் பரபரப்பு
சாலையோர கடையில் குளிர்பானம் குடித்த 7-ம் வகுப்பு மாணவி திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
எடப்பாடி
7-ம் வகுப்பு மாணவி
எடப்பாடி நகராட்சி கேட்டுக்கடை பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். இவருடைய மனைவி ராஜேஸ்வரி. இவர்களுடைய இளைய மகள் நதியா (வயது 13). இவர் எடப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.
மாணவி நதியா வழக்கம்போல் நேற்று காலை பள்ளிக்கு சென்றார். முன்னதாக அவர் பள்ளியின் அருகே உள்ள சாலையோர கடையில் குளிர்பானம் வாங்கி குடித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பள்ளிக்குள் சென்ற நதியா சற்று நேரத்தில் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் நதியாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அவர்கள் பதறி அடித்துக்கொண்டு பள்ளிக்கு உடனடியாக வந்தனர்.
பின்னர் அவர்கள் மாணவியை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த எடப்பாடி தாசில்தார் லெனின் மற்றும் போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். அவர்கள் மாணவிக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தனர். பின்னர் அவர்கள் நதியாவிடம் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து அவரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதன் முடிவுகள் வந்த பிறகு தான், மாணவி காலாவதியான குளிர்பானத்தை குடித்ததால் மயங்கினாரா? என்பது தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பரபரப்பு
இதனிடையே உணவு பாதுகாப்பு அதிகாரிகள், மாணவி நதியா குளிர்பானம் வாங்கி குடித்த சாலையோர கடை மற்றும் பல்வேறு கடைகளில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அங்கு வைக்கப்பட்டிருந்த காலாவதியான குளிர்பானங்களை அவர்கள் பறிமுதல் செய்தனர்.
எடப்பாடியில் சாலையோர கடையில் குளிர்பானம் குடித்த மாணவி மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.