தென்னை மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 8-ம் வகுப்பு மாணவர் சாவு
கரூர் அருகே தென்னை மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 8-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுதாவது:-
தென்னை மரத்தில் மோதல்
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள மரவாபாளையம் செல்லாண்டி அம்மன் கோவில் நகர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி மணிமேகலை. இந்ததம்பதியின் மகன் கிஷோர் (வயது 13). இவர் வேட்டமங்கலம் பி.கே.நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை கிஷோர் முடி வெட்டுவதற்காக வேலாயுதம்பாளையம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சேமங்கி அருகே சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி சாலையோரம் உள்ள தென்னைமரத்தில் கிஷோர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கிஷோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
பலி
இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து படுகாயம் அடைந்த கிஷோரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கிசோைர பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து கிஷோரின் தாய் மணிமேகலை கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.