8-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்:வாலிபருக்கு 23 ஆண்டு சிறை தண்டனை-ஊட்டி மகிளா கோர்ட்டு தீர்ப்பு
8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஊட்டி மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
ஊட்டி
8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஊட்டி மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
8-ம் வகுப்பு மாணவி
நீலகிரி மாவட்டம் கொளப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஜெயராம் என்கிற மனோஜ் (வயது 25). கடந்த 2017-ம் ஆண்டு இவருடைய தங்கை 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவருடைய தங்கை அதே பகுதியை சேர்ந்த ஆதிதிராவிட பிரிவை சேர்ந்த 8-ம் வகுப்பு படித்து வந்த சக தோழியின் வீட்டுக்கு சேர்ந்து படிப்பது தொடர்பாக அவ்வப்போது சென்று வருவது வழக்கம். அப்போது தங்கையின் தோழி வீட்டுக்கு ஜெயராமும் நட்பாக சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி ஜெயராம் தனது தங்கையின் தோழி வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அந்த வீட்டில் தோழியின் பெற்றோர் யாரும் இல்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட ஜெயராம் அவரை பாலியல் பலாத்காரம் செய்தார்.
பலமுறை பாலியல் தொந்தரவு
மேலும் இது குறித்து யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டியுள்ளார். இதேபோல் பலமுறை அந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதில் அந்த மாணவி கர்ப்பம் அடைந்ததால் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவ பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அந்த மாணவி அழைத்து செல்லப்பட்டார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தேவாலா அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயராமை கைது செய்தனர். அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை ஊட்டி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது.
23 ஆண்டு சிறை தண்டனை
இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றவாளியான ஜெயராமுக்கு, போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி நாராயணன் தீர்ப்பு கூறினார். மேலும் அபராத தொகையை கட்ட தவறினால் தலா 6 மாதங்கள் கூடுதல் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார். அரசு தரப்பில் இந்த வழக்கில் வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி வாதாடினார்.