சேதம் அடைந்த வகுப்பறை கட்டிடங்கள்
நாகை அருகே, அரசு மேல்நிலைப்பள்ளியில் சேதம் அடைந்த நிலையில் வகுப்பறை கட்டிடங்கள் உள்ளன. இதனால் மாணவர்கள் அச்சத்துடன் பாடம் படிக்கும் நிலை உள்ளது.
நாகை அருகே, அரசு மேல்நிலைப்பள்ளியில் சேதம் அடைந்த நிலையில் வகுப்பறை கட்டிடங்கள் உள்ளன. இதனால் மாணவர்கள் அச்சத்துடன் பாடம் படிக்கும் நிலை உள்ளது.
அரசு மேல்நிலைப்பள்ளி
நாகை அருகே முட்டம் ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு முட்டம், சன்னமங்கலம், பனங்குடி, நரிமணம், வாஞ்சூர், பூதங்குடி, உத்தம சோழபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கூடம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
ஆபத்தான நிலையில் வகுப்பறை கட்டிடங்கள்
கஜா புயலின் போது பள்ளியின் 2 கட்டிடங்கள் இடிந்து விட்டது. மீதமுள்ள கட்டிடங்களில் பெரும்பாலானவை சேதம் அடைந்து உள்ளன. வகுப்பறைகளில் உள்ள ஜன்னல், எழுதும் பலகை, தரை உள்ளிட்டவை பெயர்ந்து கிடக்கிறது.
மேலும் வகுப்பறை கட்டிடத்தில் சுவர், வெடித்து போய் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விடும் என்கிற ஆபத்தான நிலையில் உள்ளது.
புதிய கட்டிடம்
மேலும் வகுப்பறை பற்றாக்குறை காரணமாக அருகில் உள்ள ஊராட்சி அலுவலகம், மாரியம்மன் கோவில், மரத்தடி உள்ளிட்ட இடங்களில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இங்குள்ள சேதம் அடைந்த கட்டிடங்களை இடைத்துவிட்டு, தேவைப்படும் அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய வகுப்பறை கட்டிடங்களை கட்டித்தர வேண்டும். இதனை முழு ஆண்டு தேர்வு விடுமுறைக்குள் கட்டி முடிக்க வேண்டும் என மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் சுகுணவதி கூறும்போது:-
முட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டுதோறும் 100 சதவீதம் தேர்ச்சி பெறும் பள்ளியாக உள்ளது. இதனால் சுற்று வட்டாரத்தில் உள்ள மாணவ- மாணவிகள் இந்தப் பள்ளியில் விருப்பப்பட்டு சேருகின்றனர். மாவட்ட அளவில் 2-ம் இடம் பிடித்த பள்ளியாகவும் விளங்கி வருகிறது.
முட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியின், வகுப்பறை கட்டிடங்கள் சேதம் அடைந்து உள்ளன. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் என்கிற நிலையில் உள்ளது.
மழைக்காலத்தில் ஆசிரியர்களும், மாணவ- மாணவிகளும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வகுப்பறையில் அச்சத்துடன் இருக்கும் நிலை உள்ளது. இதனால் பெற்றோர் மாணவ- மாணவிகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு பயப்படுகின்றனர்.
வேதனை அளிக்கிறது
நல்ல தேர்ச்சி விகிதம் கொடுக்கும் அரசு பள்ளி, இப்படி சேதமடைந்த வகுப்பறை கட்டிடத்துடன் அபாய நிலையில் காட்சியளிப்பது வேதனை அளிக்கிறது. இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட துறையினரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பே ஆபத்தான நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்களை இடித்து விட்டு புதிதாக, தரமான வகுப்பறை, ஆய்வக கட்டிடத்துடன் கூடிய கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும்.
பூதங்குடியை சேர்ந்த ராமமூர்த்தி:- நான் இந்த பள்ளியின் முன்னாள் மாணவன். தற்போது இங்கு போதிய வகுப்பறை வசதி இல்லாததால், மரத்தடியில் உட்கார்ந்து மாணவ, மாணவிகள் படித்து வருவதை பார்க்கும்போது வேதனையாக உள்ளது. திறந்தவெளியில் உட்கார்ந்து படிக்கும் மாணவ, மாணவிகள் வெயில் காலத்தில், நிழலை தேடி அலைகின்றனர். அதுவே மழைக்காலம் என்றால் சொல்லவே தேவையில்லை.
பள்ளி வராண்டா, அருகிலுள்ள ஊராட்சி அலுவலகத்தில் மழைக்காக ஒதுங்குகின்றனர். அதிலும் சிலர் புத்தகப் பையுடன் மழையில் நனைகின்றனர்.
மழைக்காலத்தில்...
மழைக்காலத்தில் அரசு விடுமுறை விடுவதற்கு முன்னதாகவே, ஆபத்தை கருதி சில வகுப்புகளுக்கு விடுமுறையும் விடப்பட்டுள்ளது. எதற்காக இந்த விஷப்பரீட்சை. ஒரு ஊரில் பள்ளிக்கூடத்துக்கு கூட பாதுகாப்பான கட்டிடம் இல்லாதது வேதனையின் உச்சமாக உள்ளது. தற்போது ஆண்டு இறுதித்தேர்வுகள் நடந்து வருகிறது.
இந்த தேர்வுகள் முடியும் பட்சத்தில் விடுமுறை நாட்களிலேயே முட்டம் மேல்நிலைப் பள்ளிக்கு புதிய வகுப்பறைக்கான கட்டிடங்களை கட்டித் தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.