சிமெண்டு லாரி மீது மற்றொரு லாரி மோதல்; கிளீனர் சாவு
சிமெண்டு லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் கிளீனர் உயிரிழந்தாா்.
திருச்சியில் இருந்து ஜவுளி லோடு ஏற்றுக் கொண்டு சென்னைக்கு லாரி ஒன்று நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. லாரியை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியை சேர்ந்த அபுதாஹிர் என்பவர் ஓட்டினார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த திருக்குமரன் என்பவர் கிளீனராக வந்தார்.
அந்த லாரி, உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர் சிட்கோ தொழில்பேட்டை எதிரில் வந்து கொண்டிருந்தது. அப்போது, முன்னால், சிமெண்டு லோடு ஏற்றி சென்ற லாரியின் டிரைவர் திடீரென பிரேக் பிடித்தார்.
இதனால், ஜவுளி லோடு ஏற்றி சென்ற லாரி, முன்னால் சென்ற சிமெண்டு லாரி மீது மோதியது. இதில் ஜவுளி லோடு ஏற்றி வந்த லாரி கிளீனர் திருக்குமரன் படுகாயம் அடைந்தார்.
தகவல் அறிந்த எடைக்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாபர் அலி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, திருக்குமரனை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து எடைக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்து காரணமாக, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.