துப்புரவு பெண் பணியாளரை தாக்கி கவரிங் நகை பறிப்பு


துப்புரவு பெண் பணியாளரை தாக்கி கவரிங் நகை பறிப்பு
x
தினத்தந்தி 19 April 2023 12:15 AM IST (Updated: 19 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பார்வதிபுரம் அருகே துப்புரவு பெண் பணியாளரை தாக்கி கவரிங் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை:

பார்வதிபுரம் அருகே துப்புரவு பெண் பணியாளரை தாக்கி கவரிங் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

துப்புரவு பணியாளர்

தக்கலை மேலகல்குறிச்சி கிழங்குவிளையை சேர்ந்தவர் சூசை. இவருடைய மனைவி மேரி வசந்தா (வயது 53). இவர் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆளூர் மேற்கு மண்டல அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை 6 மணியளவில் பார்வதிபுரம் அருகே உள்ள களியங்காடு பஸ் நிறுத்தத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணிந்த நிலையில் 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் மோட்டார் சைக்கிளை மேரி வசந்தா அருகே நிறுத்தினர். அவர்களில் பின்னால் இருந்த நபர் திடீரென தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த மேரி வசந்தாவை முதுகில் கையால் தாக்கினார்.

நகை பறிப்பு

இதனைத்தொடர்ந்து மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்த ஆசாமி மேரிவசந்தா கழுத்தில் கிடந்த நகையை பறித்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த மேரி வசந்தா, 'திருடன்...திருடன்' என சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் அங்கு ஓடி வந்தனர்.

அதற்குள் அந்த மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். மேரி வசந்தா அணிந்திருந்தது கவரிங் நகையாகும். தங்க நகை என நினைத்து மர்ம நபர்கள் அதனை பறித்து சென்றுள்ளனர். ஆனாலும் மர்ம நபர் தாக்கியதில் மேரி வசந்தா காயமடைந்தார். இதனால் அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்து மேரி வசந்தா கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். துப்புரவு பெண் பணியாளரை தாக்கி கவரிங் நகையை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story