தூத்துக்குடி ரோச் பூங்காவில் தூய்மை பணி
தூத்துக்குடி ரோச் பூங்காவில் தூய்மை பணியை கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி பகுதியில் ஒவ்வொரு மாதமும் 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்கள், கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவ-மாணவிகள், தொண்டு நிறுவனத்தினர், பொதுமக்கள், இணைந்து சுற்றுப்பகுதிகளை தூய்மைப்படுத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு இருந்தது. அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாநகரை தூய்மையான நகரமாக மாற்றும் வகையில் நேற்று தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ரோச் பூங்காவில் பொதுமக்கள், மாணவ-மாணவிகள், தன்னார்வ தொண்டு அமைப்பினர், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், தூய்மை காவலர்கள் உள்ளிட்டோரை ஒருங்கிணைத்து மாஸ் கிளினிங் என்ற தலைப்பில் தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி., சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு தூய்மை பணியை தொடங்கி வைத்து மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
மேலும் பொதுமக்கள் இலவசமாக சைக்கிள் பயிற்சி செய்யும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டிருந்த இலவச சைக்கிள் பயிற்சி சேவையை கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர், உடல் ஆரோக்கியத்தை பேணும் வகையில் அனைவரும் சைக்கிள் பயிற்சி செய்ய வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கனிமொழி எம்.பி. சைக்கிள் ஓட்டினார். நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகன், மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிட்டா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.