துப்புரவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி நகரசபை அலுவலகம் முன்பு துப்புரவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி நகரசபை அலுவலகம் முன்பு நேற்று சி.ஐ.டி.யு. ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் துப்புரவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
துப்புரவு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த பி.எப். மற்றும் வட்டியை உடனடியாக அவரவர் கணக்கில் செலுத்த வேண்டும். கூட்டுறவு கடன் சங்கத்தில் தவணை முடிந்த வைப்பு தொகையை வழங்க வேண்டும். ஆண்டுதோறும் பங்குத்தொகை வழங்க வேண்டும். மாவட்ட கலெக்டரின் உத்தரவுப்படி ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு தினமும் ரூ. 433 ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க கிளைத் தலைவர் அந்தோணிசெல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, மாவட்ட செயலாளர் முனியசாமி, சி.ஐ.டி.யு. மாவட்டக்குழு உறுப்பினர் தெய்வேந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் மாவட்ட துணை தலைவர் ராமமூர்த்தி, துணை தலைவர் தங்கம், கிளை செயலாளர் மணிகண்டன் உள்பட துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.