தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்


தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்
x

தமிழகத்தில் உள்ள தூய்மை பணியாளர்களின் நலன் காக்கும் வகையில் தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

மதுரை,

மதுரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தை தொடங்கிவைத்தார். இத்திட்டத்திற்கான இலட்சினை வெளியிட்டார். பின்னர், தூய்மை பணியாளர்களை கண்டறிந்து கணக்கெடுக்கும் பணியினை மேற்கொள்வதற்கான தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்ட மொபைல் செயலியையும் முதல்-அமைச்சர் வெளியிட்டார்.

தொடர்ந்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 தூய்மை பணியாளர்களுக்கு தலைக்கவசம், கையுறை, கால் உறை, ஒளிரும் மேல்சட்டை ஆகிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். மேலும் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்ட கள ஆய்வு பணிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்ட குறும்படங்களை பார்வையிட்டார்.

இத்திட்டத்தின் மூலம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் 18,859 நிரந்தர பணியாளர்கள் மற்றும் 34,442 தற்காலிக ஒப்பந்த பணியாளர்கள் என மொத்தம் 53,301 பணியாளர்கள் மட்டுமல்லாமல் தனியார் துறைகள், நிறுவனங்கள் மற்றும் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து முறைசாரா பணியாளர்களும் இத்திட்டத்தின் மூலம் பயன் அடைவார்கள்.

பொருளாதாரம் மேம்படும்

இத்திட்டத்தினை அகமதாபாத்தில் உள்ள நகர்ப்புற மேலாண்மை மையத்தின் உதவியுடன் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நகர்ப்புற மேலாண்மை மையத்தின் உதவியுடன் தமிழ்நாட்டில் கழிவு மற்றும் கசடு தொடர்புடைய பணிகளில் ஈடுபட்டிருக்கும் தூய்மை பணியாளர்களின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்த முன்னோடி திட்டமாக சென்னை மாநகராட்சியில் மண்டலம்-6 திரு.வி.க. நகரிலும், மதுரை மாநகராட்சி, புதுக்கோட்டை மற்றும் பொள்ளாச்சி நகராட்சிகள், சேரன் மகாதேவி பேரூராட்சி ஆகிய 5 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை தேர்ந்தெடுத்து தூய்மை பணியாளர்களை கண்டறிந்து அவர்களுக்கான திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டம் படிப்படியாக தமிழ்நாட்டில் உள்ள மற்ற அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மாநிலமெங்கும் உள்ள தூய்மை பணியாளர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு உரிய திறன் பயிற்சிகள், அவர்களது குழந்தைகளுக்கு முறையான கல்வி வசதி வழங்குதல் மற்றும் மாற்றுத்தொழில் தொடங்க வங்கிகள் மூலம் கடன் உதவி, ஓய்வூதியம், காப்பீடு போன்ற அரசு திட்டங்களை இணைப்பதற்கான வழிமுறைகளும் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தின் மூலம் தூய்மை பணியாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து, பொருளாதாரம் மேம்பாடு அடையும்.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, இ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், கே.ஆர்.பெரியகருப்பன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், சு.வெங்கடேசன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பூமிநாதன், கோ.தளபதி, ஆ.தமிழரசி, மதுரை மாநகராட்சி மேயர் வி.இந்திராணி பொன்வசந்த், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா.

நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா, மதுரை மாவட்ட கலெக்டர் எஸ்.அனீஷ் சேகர், துணை மேயர் டி.நாகராஜன், பேரூராட்சிகள் இயக்குனர் கிரண் குராலா, மதுரை மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், ஆமதாபாத் நகர்ப்புற மேலாண்மை மையத்தின் இயக்குனர் மன்விதா மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story