'நம்ம ஊரு சூப்பரு' திட்டத்தில் தூய்மை பணி
மாடப்பள்ளி ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தில் தூய்மை பணியை கலெக்டர் அமர்குஷ்வாஹா தொடங்கி வைத்தார்.
மாடப்பள்ளி ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தில் தூய்மை பணியை கலெக்டர் அமர்குஷ்வாஹா தொடங்கி வைத்தார்.
'நம்ம ஊரு சூப்பரு'
திருப்பத்தூர் அருகே மாடப்பள்ளி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின்கீழ் மாபெரும் தூய்மை பணி நடந்தது. மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கி தூய்மை பணியை தொடங்கி வைத்தார். ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார்.
அப்போது கலெக்டர் பேசியதாவது:-
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் கிராம ஊராட்சி பகுதிகளில் நீர், சுகாதாரம் மற்றும் கழிவுநீர் மேலாண்மை போன்ற பணிகளை மக்கள் பங்கேற்புடன் செய்யும் வகையில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் சிறப்பு விழிப்புணர்வு பிரசாரம் வருகிற அக்டோபர் மாதம் 2-ந் தேதி வரை நடைபெற உள்ளது. கிராம பகுதிகளில் சிறப்பு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளும் பொருட்டு பொறுப்பு அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒத்துழைப்பு
இன்று (நேற்று) முதல் அடுத்த மாதம் 2-ந் தேதி வரை ஊரகப் பகுதிகளில் பூங்காக்கள். பஸ் நிலையங்கள். வழிபாட்டு தலங்கள் போன்ற பொது இடங்கள் மற்றும் நீர்நிலைகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படும். வருகிற 27-ந் தேதி முதல் செப்டம்பர் 2-ந் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நிலையான, பாதுகாப்பான சுகாதாரத்தை கடைபிடிக்க உறுதி செய்யும் வகையில், சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரித்தல், ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும், பொது மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தின் கீழ் தினமும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து அப்புறபடுத்தவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்கவும் மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) விஜயகுமாரி, ஒன்றிய குழு தலைவர் விஜயா அருணாச்சலம், துணைத் தலைவர் ஞானசேகரன், மாவட்ட கவுன்சிலர் சுபாஷ்சந்திரபோஸ், ஒன்றிய குழு உறுப்பினர் ரகு, தாசில்தார் சிவப்பிரகாசம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணவாளன், சங்கர், ஊராட்சி மன்ற தலைவர் கோமதி கார்த்திகேயன், துணை தலைவர் தீபா, கூட்டுறவு சங்க தலைவர் தேவராஜன், ஊராட்சி செயலாளர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட புள்ளானேரி ஊராட்சியில் தூய்மை பணிக்கான நம்ம ஊர் சூப்பரு திட்டத்தை ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார் தொடங்கி வைத்தார்.
பின்னர் அப்பகுதியில் சாலையோரம் உள்ள குப்பைகள், செடி கொடிகளை அகற்றி அப்புறப்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தினகரன், முருகேசன், மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.சதீஷ்குமார், ஊராட்சி மன்ற தலைவர் சங்கர், துணைத்தலைவர் ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.