தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்
மயிலாடுதுறையில் காலதாமதமாக சம்பளம் வழங்குவதாக கூறி தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறையில் காலதாமதமாக சம்பளம் வழங்குவதாக கூறி தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பளம்
மயிலாடுதுறை நகரில் தூய்மை பணி மேற்கொள்வதற்காக 80 தனியார் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஒரு நாளுக்கு ரூ.380 சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் மாதந்தோறும் காலதாமதமாகவே சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதனால் கடந்த 2 நாட்களாக தூய்மை பணியாளர்கள் நகராட்சி பூங்காவில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் அவர்களை நகராட்சி நிர்வாகம் சார்பில் யாரும் சென்று சந்திக்காத நிலையில் நேற்று இரவு அவர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
காலதாமதமாக சம்பளம்
இந்தநிலையில், மாதந்தோறும் காலதாமதமாக சம்பளம் வழங்கப்படுவதை கண்டித்தும், குப்பை வண்டி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாததைக் கண்டித்தும் தனியார் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மயிலாடுதுறை நகராட்சி அலுவலக நுழைவு வாசலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை தனியார் தூய்மை பணியாளர் சங்க தலைவர் அம்பேத்கர் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தனியார் துறை ஒப்பந்த பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். சுமார் 1 மணி நேரம் இந்த போராட்டம் நடந்தது. இதன் பின் தூய்மை பணியாளர்கள் கலைந்து சென்றனர்.