வியாபாரிகளை வெளியேற்றி விட்டு கடைகள் மூடல்


வியாபாரிகளை வெளியேற்றி விட்டு கடைகள் மூடல்
x

திற்பரப்பு அருவி அருகே மகாதேவர் கோவிலுக்கு சொந்தமான வணிக வளாகத்தில் கடை நடத்தி வந்த வியாபாரிகளை, ஒப்பந்த காலம் முடிவடைந்ததால் அதிகாரிகள் வெளியேற்றி விட்டு கடைகளை மூடினர்.

கன்னியாகுமரி

குலசேகரம்:

திற்பரப்பு அருவி அருகே மகாதேவர் கோவிலுக்கு சொந்தமான வணிக வளாகத்தில் கடை நடத்தி வந்த வியாபாரிகளை, ஒப்பந்த காலம் முடிவடைந்ததால் அதிகாரிகள் வெளியேற்றி விட்டு கடைகளை மூடினர்.

21 கடைகள்

குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திற்பரப்பு அருவி உள்ளது. இந்த அருவிக்கு செல்லும் நுழைவு வாயிலின் வலதுபுறம் திற்பரப்பு மகாதேவர் கோவில் வளாகத்திற்கு உட்பட்ட பகுதியில் மாவட்ட கோவில்கள் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் 21 கடைகள் உள்ளன. இந்தக் கடைகளை ஒப்பந்தம் அடிப்படையில் ஏலம் எடுத்து தனி நபர்கள் வியாபாரம் செய்து வருகின்றனர்.

ஒப்பந்த உரிமம் பெற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கடைகளை மறு ஏலம் நடத்தும் வகையில் காலி செய்து தரும்படி நிர்வாகம் தரப்பில் வியாபாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் வியாபாரிகள் மாத வாடகையை கூடுதலாக பெற்றுக் கொண்டு தங்களுக்கே கடைகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று கோவில் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வந்தனர். இதற்கு நிர்வாகம் மறுப்பு தெரிவித்து வந்ததாக தெரிகிறது.

போலீஸ் குவிப்பு

இந்தநிலையில், நேற்று காலையில் கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி தலைமையில், பத்மநாபபுரம் தொகுதி கண்காணிப்பாளர் செந்தில் குமார், குழித்துறை தொகுதி கண்காணிப்பாளர் ஆனந்த், நாகர்கோவில் தொகுதி கண்காணிப்பாளர் சிவகுமார், பொறியாளர் அய்யப்பன் உள்பட நிர்வாக அதிகாரிகள் திற்பரப்பிற்கு வந்தனர். மேலும் அங்கு ஏராளமான அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து அதிகாரிகள் வியாபாரிகளிடம் கடைகளிலுள்ள பொருள்களை அகற்றிவிட்டு, கடைகளை மூடி சாவியை ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டனர். அப்போது, வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தை

இதையடுத்து கோவில் நிர்வாக வக்கீல் மற்றும் அதிகாரிகள் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து வியாபாரிகள் கடைகளில் இருந்த பொருட்களை அகற்றிவிட்டு கடைகளை மூடிவிட்டு வெளியேறினர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காலத்தில் அருவி மூடப்பட்டு, கடைகள் திறக்க முடியாமல் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளோம். நிர்வாகம் முடிவு செய்யும் வாடகையை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். எங்களுக்கே கடைகளை மீண்டும் வழங்க வேண்டும், என்றனர்.

மறு ஏலம்

இது தொடர்பாக இணை ஆணையர் ஞானசேகரன் கூறியதாவது:-

ஒப்பந்த காலம் முடிவடைந்துள்ள நிலையில், பெரும்பாலான வியாபாரிகள் பெரும் தொகை வாடகை பாக்கி வைத்துள்ளனர். இதனால் மறுஏலம் நடத்தும் கட்டாயத்தில் உள்ளோம். கடைகள் கடந்த பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாத நிலையில் உள்ளன.

இதனால் உடனடியாக பராமரிப்பு பணிகளை தொடங்க உள்ளோம். விரைவில் மறுஏலம் நடத்தப்பட்டு கடைகள் திறக்கப்படும். ஏற்கனவே கடைகள் நடத்தி வந்தவர்களும் ஏலத்தில் கலந்துக் கொண்டு உரிமம் பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story