அனுமதியின்றி செயல்பட்ட 14 டாஸ்மாக் பார்கள் மூடல்
திண்டுக்கல்லில் அனுமதியின்றி செயல்பட்ட 14 டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டன.
டாஸ்மாக் கடைகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 159 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த டாஸ்மாக் கடைகளின் அருகில் பார் நடத்துவதற்கு டாஸ்மாக் நிறுவனத்திடம் உரிமம்பெற வேண்டும். அதற்கு பொது ஏலம் மூலம் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளின் அருகிலும் பார்கள் செயல்பட்டு வருகின்றன.
இதில் 32 டாஸ்மாக் பார்கள் மட்டுமே உரிய அனுமதி பெற்றுள்ளன. அந்த கடைகளிலும் சிலவற்றில் உரிமம் புதுப்பிக்கப்படாமல் உள்ளது. மேலும் பிற டாஸ்மாக் கடைகளின் அருகில் அனுமதியின்றி பார்கள் செயல்பட்டு வருவதாகவும், இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் புகார் எழுந்தது.
14 பார்கள் மூடல்
அதுமட்டுமின்றி அனுமதியற்ற பார்களில், டாஸ்மாக் மதுபான பாட்டில்களை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து 24 மணி நேரமும் விற்பனை செய்யப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகத்துக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இதையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் பார்கள் மற்றும் உரிமம் புதுப்பிக்காமல் செயல்படும் பார்கள் என அனைத்தையும் மூடும் நடவடிக்கையில் மதுவிலக்கு போலீசாருடன் இணைந்து டாஸ்மாக் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் திண்டுக்கல்லில் மட்டும் நேற்று 14 டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டன. மதுவிலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளுடன் இணைந்து இந்த பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல், கொடைக்கானல் நகர் பகுதியில் அரசு அனுமதியின்றி செயல்பட்ட 6 மதுபான பார்களை கலால் துறை தாசில்தார் சந்திரன், இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் தலைமையிலான போலீசார் பூட்டி 'சீல்' வைத்தனர். சின்னாளப்பட்டி பூஞ்சோலை பகுதியிலும் அனுமதியின்றி செயல்பட்ட மதுபான பாரை நேற்று முன்தினம் போலீசார் பூட்டி 'சீல்' வைத்தனர். பின்னர் நேற்று பகலில் ஊழியர்கள் மதுபான பாரை திறந்து விற்பனை செய்தனர். இதையடுத்து அங்கு சென்ற போலீசர் மீண்டும் பாரை பூட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.